பெண்களுக்கு இனி ஜாலி சமைக்க, துணி துவைக்க வந்துவிட்டது புது ரோபோ: எலான் மஸ்க்கின் அடுத்த ஏஐ புரட்சி

3 months ago 15

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதுமை விரும்பியான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மனித உருவ ரோபோவை அறிமுகம் செய்துள்ளார். இது குழந்தைகளை கவனிப்பது முதல் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியது என கூறி உள்ளார். பொது இடங்களில் மனிதர்களுடன், மனித உருவ ரோபோக்களும் நடமாடும் வகையில் தான் எதிர்காலம் இருக்கும். அதற்கான விதையை விதைத்திருக்கிறார் உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான் மஸ்க். டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரான மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை தொடர்ந்து தற்போது அவர் ரோபோ, தானியங்கி வாகனங்களில் தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ‘வீ ரோபோ’ எனும் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.அதில்தான் தனது நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்றான் அதிநவீன மனித உருவ ரோபோவை மஸ்க் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ‘ஆப்டிமஸ்’ எனப்படும் இந்த ரோபோ எதிர்காலத்தில் நமது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருக்கப் போகிறார் என உசிப்பேற்றி இருக்கிறார் மஸ்க். ஏற்கனவே மனிதனுக்கு உதவ பல ரோபோக்கள் இருந்தாலும், ஆப்டிமஸ் அசாத்திய வேகத்தில் சிந்தித்து செயல்படக் கூடிய ரோபோவாக இருக்கும் என மஸ்க் கூறியிருக்கிறார்.

வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது, வீட்டு வளாகத்தில் புற்களை வெட்டுவது, செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, சமையல் செய்வது, பரிமாறுவது என அனைத்து வேலைகளையும் இந்த ரோபோ செய்யக் கூடிய திறமை வாய்ந்தது.இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆப்டிமஸ் மனித உருவ ரோபோக்கள் கண்ணாடி கிளாசில் குளிர்பானங்களை நிரப்பி பார்வையாளர்களுக்கு பரிமாறி அசத்தின. மேலும், மக்களிடம் உரையாடிய ஆப்டிமஸ், பிறந்தநாள் வாழ்த்து பாடல்களையும் பாடி பிரமிக்க வைத்தன. பார்வையாளர்களின் பல கேள்விகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதிலளித்து பாராட்டுகளையும் பெற்றன. இந்த ரோபா 20,000 அமெரிக்க டாலரில் (ரூ.16.8 லட்சம்) தொடங்கி 30,000 (ரூ.25 லட்சம்) டாலர் வரையிலும் இருக்கும் என மஸ்க் கூறி உள்ளார்.

* ஆக்சிலேட்டர், ஸ்டியரிங் இல்லாத ரோபோ டாக்ஸி
‘வீ ரோபோ’ நிகழ்ச்சியில் ‘சைபர்கேப்’ எனப்படும் ரோபோ டாக்சியையும் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். டாக்ஸி துறையில் தானியங்கி கார்களை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாமெட் கொண்டு வர தீவிர முயற்சி செய்கிறது. அதன் ‘வேமோ’ தானியங்கி கார்கள் அமெரிக்காவில் செயல்பாட்டில் இருந்தாலும் பெரிய அளவில் வரவேற்பபை பெறவில்லை. இந்நிலையில், மஸ்க் அறிமுகம் செய்துள்ள சைபர்கேப் மிகவும் வித்தியாசமானது. இதில் ஸ்டியரிங் கிடையாது, ஆக்சிலேட்டர், கிளச் எதுவும் கிடையாது. இறக்கை போன்ற கதவுடன் 2 பேர் மட்டும் அமரும் வகையில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டுமே இருக்கும். ஓடிபி சொன்னதும் கார் கதவு திறக்கும். நீங்கள் செல்லும் இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த ஸ்கிரீனில் காட்டப்படும். நீங்கள் ஆபிஸ் அறையில் இருப்பது போன்று லேப்டாப்பில் வேலை செய்து கொண்டோ, வீட்டில் பெட்ரூமில் இருப்பது போல உறங்கிக் கொண்டோ பயணம் செய்யலாம். ரோபோ கார்களில் மிகவும் வித்தியாசமான இந்த கார் மிகவும் பாதுகாப்பானது, உறுதியான இரும்பால் செய்யப்பட்டது. இவை வரும் 2026ல் அமெரிக்க சாலைகளில் ஓடும் என மஸ்க் கூறியிருக்கிறார். இதுதவிர சரக்கு மற்றும் 20 பேர் பயணிக்கக் கூடிய ரோபோவேன் அறிமுகம் செய்யப்படும் என்றும் மஸ்க் கூறியிருக்கிறார்.

The post பெண்களுக்கு இனி ஜாலி சமைக்க, துணி துவைக்க வந்துவிட்டது புது ரோபோ: எலான் மஸ்க்கின் அடுத்த ஏஐ புரட்சி appeared first on Dinakaran.

Read Entire Article