பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை!

1 month ago 8

ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் விதைகளும் முக்கிய பங்கை வகிக்கிறது. விதைகளை மிகச்சிறப்பான ஸ்நாக்ஸ்களாகப் பயன்படுத்தலாம். விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு எத்தனையோ விதைகள் உள்ளன. அதில் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், எள்ளு விதைகள், சியா விதைகள், கசகசா போன்றவை குறிப்பிடத்தக்கவை.இந்த ஒவ்வொரு விதைகளிலுமே நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இவற்றில் ஆரோக்கியங்கள் அள்ளிக் கொடுக்கும் பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் நிறைந்துள்ளது.இந்த பூசணி விதைகளை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம்.

கொலஸ்ட்ரால் குறையும்

பூசணி விதைகளில் பெட்டோ ஈஸ்டரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்னையும் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்

பூசணி விதைகள் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள். மேலும் நீரிழிவு நோயால் அவதிப்படுவோரும் கூட இந்த பூசணி விதைகளை எடுத்துக்கொள்ள பலன்கள் கிடைக்கும்.

எடை குறைவு

பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்.

ஆர்த்ரிடிஸ் நிவாரணி

பூசணி விதைகளில் ஏராளமான அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த விதைகளை ஆர்த்ரிடிஸ் பிரச்னை உள்ள ஒருவர் உட்கொண்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைப்பதோடு, ஆர்த்ரிடிஸ் பிரச்னையில் இருந்து முற்றிலும் விடுவிக்கும். அதோடு இந்த விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூட்டுக்களின் இயக்கத்தை மேம்படுத்தி, மூட்டுக்களின் அசைவில் உள்ள பிரச்னையை சரிசெய்யும்.

ஆஸ்டியோபோரோசிஸ்

முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து ஏற்படுவது தான் ஆஸ்டியோபோரோசிஸ். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

மனநிலை பிரச்னைகள்

பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள் தான். இந்த பைட்டோ-கெமிக்கல், ட்ரிப்டோஃபேனை செரடோனினாக மாற்றி, மன இறுக்கம், மன அழுத்தம் போன்ற மனநல பிரச்னைகளில் இருந்து விடுவிக்கும்.

மெனோபாஸ் அறிகுறிகள்

பூசணி விதைகள் இறுதி மாதவிடாய் காலம் எனப்படும் மெனோபாஸ் அறிகுறிகளான உடல் சூடு, தலைவலி, இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றைக் குறைக்கும். எனவே பெண்கள் தினந்தோறும் ஒரு கையளவு பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

புரோஸ்டேட் ஆரோக்கியம்

முன்பே கூறியது போல், பூசணிக்காய் விதைகளில் உள்ள போதுமான அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோஸ்டேட் வளர்ச்சியைத் தடுக்கும். மனித உடலிலேயே புரோஸ்டேட்டில் தான் அதிகளவிலான ஜிங்க் உள்ளது. ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜிங்க் சத்து அவசியமானது. பூசணிக்காய் விதைகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. எனவே ஆண்கள் பூசணிக்காய் விதைகளை தினமும் ஒரு கை சாப்பிட, புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்பட்டு, விந்துணுக்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்கும்

டெஸ்டோஸ்டிரோன் ஆதரவு

வாழ்வில் பல்வேறு நிலைகளில் ஹார்மோன்களின் அளவு மாறும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய், மற்றும் மெனோபாஸ் காலத்திலும், ஆண்களுக்கு முதுமைக் காலத்திலும் மாறுபடும். பூசணிக்காய் விதைகளை இரு பாலினத்தவரும் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பான அளவில் பராமரிக்கப்படும்.

புற்றுநோய்

பூசணிக்காய் விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயைத் தடுப்பதிலும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது. ஆய்வுகளில் பூசணிக்காய் விதைகளில் உள்ள சத்துக்கள், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் இதன் விலையும் கூட அதிகமாக இருக்கின்றது. எனினும் எவ்வளவோ செலவு செய்கிறோம். நம் உடல் ஆரோக்கியத்திற்காகவும் கொஞ்சம் செலவிடுவோம்.
– கவிதாபாலாஜிகணேஷ்

The post பெண்களின் ஆரோக்கியத்தில் பெரும்பங்காற்றும் பூசணி விதை! appeared first on Dinakaran.

Read Entire Article