சென்னை: பெண் போக்குவரத்து காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாகா கமிட்டி பரிந்துரைப்படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை பெருநகர போக்குவரத்து வடக்கு மண்டல இணை கமிஷனராக மகேஷ்குமார் பணியாற்றி வந்தார்.
இவர் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனராக இருந்து இணை கமிஷனராக கடந்த ஜனவரி மாதம் பதவி உயர்வு பெற்ற காலத்தில், இவருக்கு கீழ் நிலையில் பணியாற்றும் போக்குவரத்து பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்ததாக ஏற்கனவே இவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அதைதொடர்ந்து இணை கமிஷனர் மகேஷ்குமார் அதிரடியாக சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் தெற்கு மண்டலத்தில் பணியாற்றிய போது பெண் போக்குவரத்து காவலர் ஒருவரை அவர் அடிக்கடி தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. வடக்கு மண்டலத்திற்கு மகேஷ்குமார் சென்ற பிறகும், தனது அலுவலகத்திற்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தனக்கு சாதகமாக நடக்கவில்லை என்றால் பணியிடை நீக்கம் செய்துவிடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பெண் போக்குவரத்து காவலர் சம்பவம் குறித்து வக்கீல் ஒருவர் மூலம் டிஜிபி சங்கர் ஜிவாலை சந்தித்து பெண் போக்குவரத்து காவலருக்கு இணை கமிஷனர் மகேஷ்குமார் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி விசாகா கமிட்டி தலைவர் டிஜிபி சீமா அகர்வால் விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி விசாகா கமிட்டி தலைவரான டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான குழுவினர், போக்குவரத்து பெண் காவலர் மற்றும் இணை கமிஷனர் மகேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் மகேஷ்குமார் போக்குவரத்து காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து விசாகா கமிட்டி தலைவர் டிஜிபி சீமா அகர்வால் குழுவினர் நடத்திய விசாரணை அறிக்கையை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த புரிந்துரைப்படி டிஜிபி சங்கர் ஜிவால் சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மகேஷ்குமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் நகல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மகேஷ்குமாரின் வீட்டில் ஒட்டப்பட்டது.
* மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
இணை கமிஷனர் மகேஷ்குமாருக்கு பாலியல் குற்றம் செய்ய உடந்தையாக இருந்ததாக, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் பெயரை பெண் காவலர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அம்பத்தூரில் உள்ள பெண் காவலரின் வீட்டிற்கு சென்று இணை கமிஷனர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி மிரட்டியதாகவும் பெண் காவலர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து விசாகா கமிட்டி அதிகாரிகள் பெண் காவலரின் புகாரின் மீது இன்ஸ்பெக்டர் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். அதில் அனைத்தும் உறுதியானதை தொடர்ந்து அதற்கான அறிக்கை உயர் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேலை அதிரடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உயர் காவல்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
The post பெண் போக்குவரத்து காவலருக்கு பாலியல் தொந்தரவு சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை கமிஷனர் மகேஷ்குமார் சஸ்பெண்ட்: விசாகா கமிட்டி பரிந்துரைப்படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை appeared first on Dinakaran.