கோவை: பெண் தோழியை அபகரித்ததால் வாலிபரை போதை ஊசி செலுத்தி, தலையணையால் அமுக்கி நண்பர்கள் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை வெள்ளலூர் அன்பு நகர் அருகே புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று பாதியில் கைவிடப்பட்டது. அங்குள்ள காலி இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போத்தனூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலை செய்யப்பட்டவரின் மார்பில் அபர்ணா என்று லவ் சிம்பளுடன் ஆங்கிலத்திலும், XIX.XI.MMVI எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை வைத்து போலீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் மதுரை காளவாசல் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சென்னை பல்கலைக்கழக மாணவன் சூர்யா (21) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் சூர்யாவை கொலை செய்தது மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு கணக்குப்பிள்ளை வீதியை சேர்ந்த கார்த்தி (20) மற்றும் அவரது நண்பர்கள் போத்தனூர் பஞ்சாயத்து ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்த நரேன் கார்த்திக் (20), வேலந்தாவளம் நாச்சிபாளையத்தை சேர்ந்த மாதேஷ் (21), போத்தனூர் ராமானுஜம் வீதியை சேர்ந்த முகமது ரபி (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சூர்யா, கார்த்தி, நரேன் கார்த்திக், மாதேஷ், முகமது ரபி ஆகியோர் கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களானார்கள். பின்னர் சூர்யா சென்னை பல்கலைக்கழகத்தில் சீட் கிடைத்ததால் கோவையில் இருந்து சென்றார். கார்த்தி பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சியும், நரேன் கார்த்திக் கோவைப்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காமும், முகமது ரபி மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏவும் படித்து வருகின்றனர். மாதேஷ் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இந்நிலையில் சூர்யா கடந்த வியாழக்கிழமை கோவை வந்து பேரூர் போஸ்டல் காலனியில் கார்த்தி தங்கி இருந்த அறைக்கு சென்றார். பின்னர் கார்த்தி தனது நண்பர்களான நரேன் கார்த்திக், மாதேஷ், முகமது ரபி ஆகியோரையும் தனது அறைக்கு வரவழைத்தார். அங்கு 5 பேரும் சேர்ந்து மது குடித்தனர். போதைக்காக போதை மாத்திரை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. அப்போது கார்த்தியிடம், ‘‘உனது பெண் தோழியிடம் நான் பேசி வருகிறேன். அவள் தற்போது எனக்கு தோழி’’ என சூர்யா கூறியுள்ளார். ஆனால் கார்த்தி அதை நம்பவில்லை. உடனே சூர்யா தனது போனில் கார்த்தியின் பெண் தோழியுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களையும், வீடியோ காலில் பேசியதையும் காண்பித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
அதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்கிருந்த போதை ஊசியை எடுத்து சூர்யாவிற்கு செலுத்தி உள்ளனர். மயக்க நிலையில் இருந்த சூர்யாவின் முகத்தை தலையணையால் அமுக்கி உள்ளனர். பின்னர், கார்த்தி தலையணையை சூர்யாவின் முகத்தில் வைத்து ஏறி அமர்ந்துள்ளார். அதில் மூச்சுத்திணறி சூர்யா துடிதுடித்து இறந்துள்ளார். சூர்யா இறந்தது கூட தெரியாமல் 4 பேரும் பிணத்துடன் படுத்து தூங்கினர். மறுநாள் காலை 4 பேரும் எழுந்து பார்த்தபோது சூர்யா உயிரிழந்தது அவர்களுக்கு தெரிந்துள்ளது. விடிந்ததால் சடலத்தை அகற்றுவது கடினம் என தெரிந்துகொண்ட அவர்கள் மறுநாள் இரவு வரை காத்திருந்தனர். மாதேஷ் வாடகை காரை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து உடலை துணியால் கட்டி கார் டிக்கியில் எடுத்து சென்று வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் வீசி உள்ளனர். பின்னர் 4 பேரும் வீடு திரும்பி போலீசாருக்கு தகவல் தெரிகிறதா? என கண்காணித்து வந்தனர். போலீஸ் எப்படியும் பிடித்து விடுவார்கள் என பயந்து மாதேஷ் போத்தனூர் போலீசில் கொலை சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து நடந்த விசாரணையின் அடிப்படையில் மேற்கொண்டு 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post பெண் தோழியை அபகரித்ததால் ஆத்திரம்; போதை ஊசி செலுத்தி, தலையணையால் அமுக்கி வாலிபரை கொன்ற நண்பர்கள் appeared first on Dinakaran.