பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 9-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த முடிவு

3 months ago 23

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்நிலையில், வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 2-ந்தேதி கோஷ் கைது செய்யப்பட்டார். 14-ந்தேதி அபிஜித் மொண்டல் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா போலீஸ் அவரை 18-ந்தேதி சஸ்பெண்டு செய்தது. அவர்கள் இருவரும் சீல்டா கோர்ட்டில் இருந்து பிரசிடென்சி சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டனர்.

இந்த விசயத்தில், டாக்டர்களின் பாதுகாப்பு மற்றும் பிற விவகாரங்கள் தொடர்புடைய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி தேசிய பணிக்குழுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் திங்கட்கிழமை கேட்டு கொண்டது.

இதுபற்றிய வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் பிற நீதிபதிகளான பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. எனினும், வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முழுமையடையாமல் தாமதிக்கப்பட்டு வருகின்றது. அதுபற்றியும் அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நீதி கோரி கொல்கத்தா பயிற்சி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த சூழலில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி டாக்டர்கள் நாளை மறுநாள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக செல்ல உள்ளனர்.

இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், இந்த விவகாரத்தில் நீதி கோரி, துணிச்சலாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்களுக்கு எங்களுடைய ஈடுஇணையற்ற ஆதரவை தெரிவிக்கிறோம்.

இதன்படி, டெல்லியில் உள்ள ஜே.எல்.என். ஆடிட்டோரியத்தில் இருந்து நாளை மறுநாள் மாலை 6 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி செல்லும் பேரணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் நீதி வழங்கப்படாத நிலையில், கவனம் ஈர்க்கும் வகையிலான இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்ட அவர்களது துணிச்சலான முடிவை நாங்கள் பாராட்டுகிறோம்.

நீதியை பாதுகாக்க போதிய நடவடிக்கைகள் இல்லாத சூழலை உணர்ந்துள்ள பயிற்சி டாக்டர்களின் உதவியற்ற நிலையை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விவகாரத்தில், தொடர்புடைய நபர்களுக்கு எதிராக, விரைவான மற்றும் உறுதியான சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Read Entire Article