பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சந்தீப், அபிஜித் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு

3 months ago 28

சீல்டா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

கடந்த 2-ந்தேதி கோஷ் கைது செய்யப்பட்டார். இதன்பின், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிதி முறைகேடு தொடர்புடைய விவகாரத்தில், கடந்த 10-ந்தேதி கோஷ் மற்றும் 3 பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 14-ந்தேதி அபிஜித் மொண்டல் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா போலீஸ் அவரை 18-ந்தேதி சஸ்பெண்டு செய்தது. இந்நிலையில், சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் வருகிற அக்டோபர் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சீல்டா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கிற்காக 2 பேரும் பிரசிடென்சி சிறையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் இருவரும் சீல்டா கோர்ட்டில் இருந்து பிரசிடென்சி சிறைக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டனர்.

Read Entire Article