
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் இமாம்வாடா போலீஸ் நிலையத்தில் 28 வயது பெண் டாக்டர், யவத்மாலை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் (வயது30) என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், திருமணம் செய்வதாக கூறி ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.
அதாவது பெண் டாக்டருக்கு, கடந்த 2022-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தர்ஷன் துகாட் அறிமுகம் ஆனார். அப்போது பெண் டாக்டர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். தர்ஷன் துகாட் யு.பி.எஸ்.இ. தேர்வுக்கு தயாராகி வந்தார். முதலில் 2 பேரும் சமூகவலைதளம் மூலமாக பழகி வந்தனர். அதன்பிறகு செல்போன் எண்களை பரிமாறி உறவை வளர்த்து வந்தனர். இதற்கிடையே 2 பேருக்கும் இடையே நெருக்கம் அதிகமானது.
இந்தநிலையில் திருமணம் செய்வதாக கூறி தர்ஷன் துகாட், பெண் டாக்டரை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இதற்கிடையே அவர் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அதன்பிறகு அவர் பெண் டாக்டருடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஒருகட்டத்தில் அவர் பெண் டாக்டரை சாதியை காரணமாக கூறி திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.
ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரும் பெண் டாக்டருக்கு சரியான பதிலை கூறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தர்ஷன் துகாட் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார். பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் பலாத்காரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.