நன்றி குங்குமம் தோழி
உடல் அளவிலும், மன அளவிலும் நிறைய மாற்றங்களை சந்தித்தாலும், வாழ்வில் சாதனை செய்யும் அனைத்துப் பெண்களும் ‘தம் உடல் நலனை கவனித்துக் கொள்கிறோமா?’ என்றால், ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம்.இந்நிலையில், நமக்குப் போதிய விழிப்புணர்வு தரும் புள்ளி விவரங்களையும், அதன் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆரோக்கிய விஷயங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்காகவே இந்தக் கட்டுரை.
பெண் உடலின் முக்கியத்துவம்…
ஒரு பெண் தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவளது உடலில் அவள் தலைமுறைக்கான முட்டைகள் உண்டாகிவிடும். எனவே இருபது முப்பது வருடம் கழித்து பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியம் இங்கேயே தொடங்கிவிடுகிறது.மேலும், உலகில் தோன்றிய முதல் உயிர் ஆணா, பெண்ணா எனில் பெண்தான் முதலில் தோன்றிய உயிர். எனவே, ஆண்கள் மரபணு மாற்றங்களை விட பெண் குலத்தின் மரபணு மாற்றங்கள் மிக முக்கியமான ஒன்று.நாம் உண்ணும் உணவு, இருக்கும் சூழலில் உள்ள மண், காற்று என அனைத்தும் நம் ஆரோக்கியத்தோடும், மரபணு மாற்றங்களோடும் தொடர்பு கொண்டது என்பதை உணர வேண்டும்.
புள்ளி விவரங்கள்…
1. இந்தியாவில் 57 சதவிகித பெண்கள் குறைவான உடல் உழைப்பில் இருக்கிறார்கள். இந்த சதவிகிதம் ஆண்களை விட அதிகம் என்பது இந்த ஆராய்ச்சியின் அதிர்ச்சி முடிவு. 42 சதவிகித ஆண்கள் மட்டுமே குறைவான உடல் உழைப்பில் உள்ளவர்கள்.
2. உலக அளவைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள பெண்களின் பி.சி.ஓ.டி சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. உலக அளவில் 4 முதல் 21 சதவிகிதமும், இந்தியாவில் 2 முதல் 35 சதவிகிதமாக உள்ளது.
3. ஆண்களைக் காட்டிலும் முதுகு வலி வருபவர்களின் எண்ணிக்கையில் பெண்களே உள்ளனர். உலகளவில் ஒவ்வொரு மூன்று மாத கால அறிக்கையின் படி 31.6 சதவிகித பெண்கள் முதுகு வலியால் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் 28 சதவிகிதம்தான் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
4. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குதான் மனம் சார்ந்த பிரச்னைகள் அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது. சிறு சிக்கல்களான பட
படப்பு, கோபம் முதல் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பெரிய சிக்கல்கள் வரை இதில் அனைத்து வகைகளும் உள்ளடங்கும்.
5. இயல்பாகவே பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்குதான் பக்கவாதம் வரும் எண்ணிக்கை அதிகம். ஆனால் கடந்த சில வருடங்களில் கொல்கத்தாவில் ஒரு லட்சம் பெண்களில்
178 நபருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் ஆண்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் 117 நபர்கள்தான். அதாவது, பெண்களுக்கும் இவ்வகை பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
6. உலக அளவில் சராசரியாக, கடந்த சில வருடங்களை கவனித்தால், உடற்பயிற்சிக் கூடத்தில் பட்டியல் வைத்திருப்பவர்கள் சதவிகிதத்தில் 52 சதவிகிதம் பெண்கள்தான். மீதம் 48 சதவிகிதம் மட்டுமே ஆண்கள்.
7. இன்னமும் இந்தியாவில் 28 சதவிகித பெண்கள் மொத்த வாரத்தில் முப்பது நிமிடம் கூட உடல் உழைப்பில் இல்லாமல் இருக்கிறார்கள். இதில் அதிகப் பங்கு வயதான பெண்களே வகிக்கிறார்கள். அதாவது, ஆரோக்கியமாய் இயங்கக்கூடிய வயதான பெண்கள். இவர்கள் வயதாகிறது என மனதளவில் நினைப்பதால் சுறுசுறுப்பாக இயங்குவதில்லை.
8. உடற்பயிற்சிகள் பிடித்திருந்தும், அதன் மனம் மற்றும் உடல் சார்ந்த பலன்கள் அறிந்தும் பாதிக்குப் பாதி பெண்கள் உடற்பயிற்சி செய்வதில்லை.
9. பெண்கள் உடற்பயிற்சி செய்வதனை ஒரு தினசரி கடமையாக நினைத்து செய்யாததற்கு கீழ்க்கண்ட காரணங்களை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
* நேரம் போதாமை – 74%.
* தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை – 35%.
* பயம், கூச்சம் மற்றும் அசௌகரியம் தரக்கூடிய சூழ்நிலைகள் – 44%.
* போதுமான ஆர்வம், குஷி, நல்ல மனநிலை இல்லாமை – 45%.
*வீட்டு வேலைகளை விட்டு விட்டு உடற்பயிற்சிகளில் ஈடுபடத் தயங்குவது – 26%.
10.தொடர்ந்து தினசரி உடற்பயிற்சி செய்யும் பெண்கள் செய்யாதவர்களைக் காட்டிலும் எப்போதும் இருப்பதை விட 52% மகிழ்ச்சியாகவும், 50% ஆற்றலோடும், 48% தன்னம்பிக்கை அதிகமாகவும், 67% குறைவான மனக் கவலைகளுடனும், 80% குறைவான எரிச்சல்களோடும் உணர்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.
11. இந்தியாவில் 8 சதவிகிதம் பெண்கள் கருத்தரிக்க முடியாமல் இருக்கிறார்கள். இதில் 3 சதவிகிதம் கருத்தரிக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்பதும், 5 சதவிகிதத்தினர் கருத்தரிக்க முடியும். ஆனால், ஏதேனும் உடல், மனம் சார்ந்த சிக்கல்கள், சுற்றுச்சூழல் போன்ற காரணிகள் என பல உண்டு.
12. இந்தியர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் அதிக தூக்கம் சார்ந்த பிரச்னைகள் வருவதாக ஆய்வுகள் சொல்கிறது (32.5 சதவிகிதம் பெண்களும், 23.6 சதவிகிதம் ஆண்களும்). இதில் வயதான பெண்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தூக்கம் வராமல் இருப்பது, தூக்கத்தில் அடிக்கடி எழுவது, குறைந்த நேரம் தூங்குவது, தூங்கும் நேரத்திற்கு முன் கவலையோடும், யோசனையோடும் இருப்பது என அனைத்தும் இதில் அடங்கும்.
13. சரியான மற்றும் நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருக்கும் பெண்கள் முக்கால்வாசி பேருக்கு மாதவிடாய் நாள் நெருக்கத்தின் போதும், மாதவிடாய் காலம் முடியும் நேரத்திலும் (Menopause) நிகழும் ஹார்மோன்களின் மாற்றங்களே இதற்கு காரணமாக அமைகிறது.
14. மாதவிடாய் முடியும் காலமான மெனோபாஸ் நேரத்தை வைத்தும், பெண்களின் அந்த நேரத்தில் செய்யும் உடற்பயிற்சிகளை வைத்தும் ஆய்வு செய்ததில் கீழ்க்கண்டவற்றை கண்டறிந்துள்ளனர்.
* இந்நேரத்தில் தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, மெனோபாசின் அறிகுறிகளான மனக் குழப்பம், உடல் சோர்வு, மறதி, அடிக்கடி வேர்ப்பது, மன அழுத்தம் என அனைத்தும் 84 சதவிகிதம் குறைவாகவே உள்ளது.
* உடற்பயிற்சி செய்யாத பெண்களில் 82 சதவிகிதம் நபர்களுக்கு மெனோபாஸ் அறிகுறிகள் உள்ளது.
* உடற்பயிற்சிகள் செய்வதால் 70 சதவிகிதம் பெண்கள் தங்களின் அறிகுறிகள் அதிகமாகாமல் குறைந்த அளவில் இருப்பதாகவும், தினசரி வாழ்வியல் பாதிக்கப்படாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
15. உயர் பாதணி அணியும் பெண்களில் 58 சதவிகிதம் நபர்களுக்கு தமக்கு முதுகு வலி வருவதாக கூறுகின்றனர்.
இயன்முறை மருத்துவம்…
உடற்பயிற்சிகளை முறையாக அடிப்படை முதல் கற்றுக்கொள்ள அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகுவது இன்றியமையாததாகும். மேலும் ஒருவரின் தசைகளின் திறன், வலிமை என அனைத்தையும் ஆராய்ந்து, சோதித்து அதற்கேற்ப உடற்பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றும் கொடுப்பர்.
உடற்பயிற்சிக்கூடம் செல்ல விரும்பாதவர் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொண்டு செய்து வரலாம். அல்லது அருகில் உள்ள இயன்முறை மருத்துவ மையத்தை அணுகி அங்கு கற்றுக்கொண்டு வீட்டில் செய்து வரலாம்.
கேடயமாகும் உடற்பயிற்சிகள்…
* கோபம், எரிச்சல் என மனம் சார்ந்து எழும் சிறு சிக்கல்கள் கூட உடற்பயிற்சிகள் செய்வதால் குறையும்.
*மூளைக் கூர்மை வலிமையாகும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* உடல் வலிமை பெறுவதோடு, உடல் வலி, மூட்டு வலி என அனைத்தையும் வராமல் தடுக்கலாம்.
*இளம் வயது முதலே தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் வயதாகும் போதும் திடமாக இயங்க முடியும்.
* பி.சி.ஓ.டி, தைராய்டு பிரச்னைகள், மாதவிடாய் பிரச்னைகள் அனைத்தும் வராமல் தடுக்க முடியும்.
*ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை, இதய அடைப்பு, பக்கவாதம் என மற்ற நோய்களையும் தள்ளிப்போட முடியும், வராமல் தடுக்கவும் முடியும்.
*சீரான தூக்கம், சரியான நேரத்தில் பசி, தினசரி மலம் கழிப்பது என இந்த மூன்று தினசரி நிகழ்வுகளும் எளிதாய் இயல்பாய் நிகழும்.
மொத்தத்தில் பெண் எனும் பேருயிருக்கு ஆரோக்கியமே அஸ்திவாரம், அடிப்படைத் தேவை என்ன என்பதை உணர்ந்து செயல்படவும், பெண்கள் தினத்தை முன்னிட்டு நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான தேவைகள் அறிந்து தெளிவுறவும் என் இனிய வாழ்த்துகள்.
மருத்துவர்: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
The post பெண் எனும் பேருயிர்… ஆரோக்கியமே அஸ்திவாரம்! appeared first on Dinakaran.