திருமலை: பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்ப முயன்றபோது லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியின் புறநகர் பகுதியான திவான் குளம் என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. நேற்று ஒரு லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக டிரைவர் லாரியை ஓட்டி வந்தார். டீசல் பிடிக்க ஊழியர் முயன்றபோது லாரியின் கேபினில் திடீரென கரும் புகை வெளியானது. இதை பார்த்த ஊழியர், டிரைவர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லாரியின் முன்புற பகுதி எரிந்து சேதமடைந்தது. ஆனால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் லாரியில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெட்ரோல் பங்க்கில் தீப்பிடித்து எரிந்த லாரி: ஆந்திராவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.