பெங்களூருவில் தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம்

2 hours ago 3

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 14-ந் தேதி இரவு தொழிற்சாலை கழிவறையில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் கன்னட மொழி குறித்து இழிவாகவும் எழுதப்பட்டிருந்தது.

இதை பார்த்த தொழிற்சாலை நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கன்னட அமைப்பினர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் மீது தொழிற்சாலை நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article