
பெங்களூரு,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கேப்டனான பாப் டு பிளெஸ்சிசை கழற்றி விட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முன்னதாக நடைபெற்ற ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களுரு நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் விராட் கோலியே மீண்டும் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் விராட் கோலியை தாண்டி பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியை தாண்டி ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட என்ன காரணம்? என்பது குறித்து தற்போது புதிதாக பெங்களூரு அணியில் இணைந்துள்ள ஜிதேஷ் சர்மா பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையிலேயே ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டது மற்ற அனைவரையும் போன்று எனக்கும் தாமதமாகத்தான் தெரிந்தது. விராட் கோலி ஏன் கேப்டன் பதவியை மறுத்தார்? என்று தெரியவில்லை. ஆனாலும் அது நிர்வாகம் மற்றும் கோலிக்கும் இடையேயான முடிவாகத்தான் இருக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை கோலி கடந்த -3 ஆண்டுகளாகவே கேப்டன் பதவியை துறந்து முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.
எனவே இந்த ஆண்டும் அவர் என்ஜாய் செய்து விளையாட நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அவர் கேப்டன் பதவியை மறுத்திருக்கலாம். அதேபோன்று ராஜத் படிதாரிடம் இருக்கும் திறனை நிர்வாகம் புரிந்து கொண்டதாலும், அவர்மீது நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்ததாலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கிருக்கலாம். மேலும் விராட் கோலியின் ஆதரவும், நம்பிக்கையும் பெற்றிருப்பதாலும் படிதாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம்" என்று கூறினார்.