பெங்களூரு,
தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் சென்றார்.
அங்கு டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலகங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார். அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் எலகங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டுள்ளார். அவர்கள் அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து பஸ் நிற்கும் இடத்தை காண்பிப்பதாக அழைத்து சென்றனர்.
பின்னர் எஸ்.ஜே.பார்க்கில் உள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்ற நபர்கள், அந்த பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அந்த பெண்ணிடம் இருந்த நகைகள், பணத்தை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து மறுநாள் காலை அந்த பெண் பெங்களூரு மத்திய மண்டலத்தில் உள்ள மகளிர் போலீசில் தன்னை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் உடனே எஸ்.ஜே.பார்க் போலீசாருக்கு தகவல் அளித்து, தொழிலாளர்களை கைது செய்யும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து எஸ்.ஜே.பார்க் போலீசார் 2 தனிப்படை அமைத்து நேற்று காலை 2 தொழிலாளர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கணேஷ் (வயது 27), சரவணன் (35) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த குடோனிலேயே தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.