ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் லவீரா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண். இவரது மகள் அருணா. இதனிடையே, அருணாவுக்கும் விஜய் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து, திருமணத்தின்போது மணமகள் இல்லத்திற்கு மணமகன் விஜய்-ஐ குதிரையில் அழைத்து வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், திருமண வீட்டார் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மணமகன் விஜய் குதிரையில் ஏறி வரக்கூடாது என்று அந்த கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மணமகனை குதிரையில் அழைத்துவரும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி போலீசில் மனு அளித்தார்.
இந்நிலையில், விஜய்க்கும், அருணாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி லவீரா கிராமத்தில் 200 போலீசார் குவிக்கப்பட்டனர். மணமகன் விஜய் திருமணம் நடைபெறும் பகுதிக்கு குதிரையில் வந்தார். அவருக்கு பாதுகாப்பாக 200 போலீசார் உடன் வந்தனர். போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் மணமகன் விஜய் மணமகள் அருணாவின் வீட்டிற்கு குதிரையில் சென்றார். பின்னர், இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.