வேலூர், ஏப்.12: பெங்களூருவில் இருந்து வாங்கி வந்து, காட்பாடி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டையில் நேற்று காலை ஒரு பெட்டிக் கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி விற்று வந்தது தெரியவந்தது. தொடர்ந்து கடையில் இருந்து 14 கிலோ பான்பராக், குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளர் அக்பர்பாஷா(50) என்பவரை பிடித்து நடத்திய விசாரணையில், அக்பர்பாஷாவுக்கு வேலூர் பாபுராவ் தெருவை சேர்ந்த லக்மாராம்(30) என்பவர் பெங்களூரில் இருந்து பான்பராக் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து இவரிடம் விற்பனைக்காக வழங்கி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அக்பர்பாஷா, லக்மாராம் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் பெங்களூருவில் யாரிடம் குட்கா வாங்கி வந்தார். வேலூருக்கு எப்படி கொண்டுவந்தார் என்று தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.
The post பெங்களூருவில் இருந்து வாங்கி காட்பாடியில் விற்பனை; பெட்டி கடையில் 14 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.