பெங்களூருக்கு எதிரான போட்டி... சற்று உணர்ச்சிவசமாக இருந்தது - சிராஜ் பேட்டி

1 month ago 6

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய முகமது சிராஜ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து போட்டி முடிந்த பின்னர் சிராஜ் அளித்த பேட்டியில் பெங்களூருவுக்கு எதிராக ஆடுவது சற்று உணர்ச்சிவசமாக இருந்தது என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக விளையாடினேன். தற்போது குஜராத் அணிக்காக விளையாடுகிறேன்.

எனது முந்தைய அணிக்கு எதிரான இந்த போட்டியில் களம் காணுகையில் எனக்கு சற்று உணர்ச்சிவசமாக இருந்தது. ஆனால் பந்து எனது கையில் வந்த பிறகு முழு வேகத்துடன் செயல்பட்டேன். நான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்ததால் என்ன தவறு செய்கிறேன் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது.

இதனால் எனக்கு கிடைத்த ஓய்வின் போது எனது உடல் தகுதி மற்றும் பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தினேன். அது மனரீதியாகவும் எனக்கு உதவியது. குஜராத் அணியினருடன் இணைந்த போது பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுடன் அதிகம் பேசினேன். அவரது ஆலோசனை எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்ததுடன் எனது பந்து வீச்சையும் மெருகேற்றி இருக்கிறது.

இதேபோல் சக வீரர்களான ரபாடா, இஷாந்த் ஷர்மா ஆகியோரிடமும் கலந்து ஆலோசிக்கிறேன். இதுவும் எனக்கு உதவிகரமாக இருக்கிறது. ஒரு பந்து வீச்சாளராக நான் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இல்லை என்றால் கண்டிப்பாக பதற்றம் உருவாகும்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உள்ளூர அச்சம் ஏற்படும். உங்களது பந்து வீச்சில் சிக்சர் அடிக்கப்பட்டால் நீங்கள் வேறு விதமாக பந்து வீச முயற்சி செய்வீர்கள். எனவே, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. எந்த ஆடுகளமாக இருந்தாலும் நம்பிக்கையோடு செயல்பட்டால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article