பெங்களூருக்கு எதிராக தோல்வி: ஹர்திக் பாண்ட்யா சொல்வதென்ன..?

6 hours ago 2

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி மும்பையை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. பெங்களூரு அணி, மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியிருப்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பெங்களூரு தரப்பில் குருணல் பாண்ட்யா 4 விக்கெட்டும், ஹேசில்வுட், யாஷ் தயாள் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

4-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். மும்பை இந்தியன்சுக்கு இது 4-வது தோல்வியாகும்.

இந்நிலையில் தோல்வி குறித்து விளக்கம் அளித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, "இது ஒரு ரன் திருவிழா. விக்கெட் மிகவும் நன்றாக இருந்தது. மீண்டும் இரண்டு ஹிட்களுடன் தோல்வியடைந்தோம் என்று நான் எனக்குள் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு சொல்ல அதிகம் இல்லை.

ஆடுகளம் இருக்கும் நிலையை பார்த்து என்னுடைய பவுலர்களை நான் விமர்சிக்க வேண்டாம் என நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பந்து வீச பவுலரிடம் மறைக்க எதுவுமே இல்லை. செயல்முறை திட்டத்தில் தான் அனைத்துமே இருக்கின்றது. நிச்சயமாக பேட்ஸ்மேன்களை உங்களால் தடுக்க முடியும். ஆனால் பவுலர்கள் மீது எந்த ஒரு கடின விமர்சனத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினம். மேலும் எங்களிடம் பல வகையான பவுலர்களும் இல்லை. நாங்கள் ஒரு பத்து பன்னிரண்டு ரன்களை கூடுதலாக குறைத்து விட்டோம். அதை தான் என்னால் சொல்ல முடியும். " என்று கூறினார்.

ரோகித் சர்மா குறித்து பேசிய ஹர்திக் பாண்ட்யா, "கடந்த போட்டியில், ரோகித் விளையாடவில்லை. அதனால் நாங்கள் ஒருவரை மேலே கொண்டுவர வேண்டியிருந்தது, அவரைப் போன்ற ஒருவர் பல பரிமாண ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். டெத் போட்டியிலும் விளையாட முடியும். ரோகித் திரும்பி வந்ததும், நமன் கீழ் வரிசையில் இறங்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.

திலக் அருமையாக ஆடினார். கடைசி ஆட்டத்தில், நிறைய விஷயங்கள் நடந்தன. மக்கள் அதைப் பற்றி நிறைய விஷயங்களைச் சொன்னார்கள், ஆனால் முந்தைய நாள் அவருக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்தது மக்களுக்குத் தெரியாது. கடந்த போட்டிக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தான் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை.

இந்த காரணத்தால் தான் அவரை நாங்கள் இம்பேக்ட் வீரராக களம் இறக்கி அவரை மீண்டும் திருப்பி பெவிலியனுக்கு வர சொன்னோம். ஆனால் இன்று அவர் அபாரமாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே என்பது மிகவும் முக்கியம். முதல் இரண்டு ஓவர்கள் அதிரடியாக ஆடினோம். ஆனால் அதன் பிறகு எங்களால் ரன் குவிக்க முடியவில்லை.

அதேபோன்று நடு ஓவர்களிலும் நாங்கள் போதிய ரன் அடிக்கவில்லை. இந்த இரண்டும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. பெங்களூரு அணி பவுலர்கள் தங்களுடைய திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்கள். அவங்களுடைய பந்து வீச்சை கடைசியில் எங்களால் அடிக்க முடியவில்லை.

பும்ரா எங்கள் அணியில் வந்திருப்பது எங்கள் அணியின் பலத்தைக் கூட்டுகிறது. அவர் என்னுடைய பணியை மிகவும் சுலபமாக ஆக்கிவிட்டார். இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்கள் எங்களுக்கு நடந்து இருக்கிறது. நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். களத்திற்கு சென்று உங்களுடைய சிறந்த பங்களிப்பை கொடுங்கள். நாங்கள் அனைவரும் வீரர்களுக்கு துணையாக இருக்கின்றோம். எங்களுக்கு தேவையான முடிவு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார். 

Read Entire Article