பெங்களூரு மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டம்: முதல்வர் சித்தராமையா நாளை தொடங்கி வைக்கிறார்

3 months ago 10

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா நாளை தொடங்கி வைக்கிறார். நூறு வார்டுகள் கொண்டிருந்த பெங்களூரு மாநகராட்சியை 198 வார்டுகளாக தரம் உயர்த்தியதுடன் 240 சதுர கி.மீ சுற்றளவில் இருந்த மாநகர எல்லையை 800 ச.கி.மீ கடந்த 2010ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக மாநகரை சுற்றி இருந்த 110 கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

இந்த கிராமங்களுக்கு சுத்தமான காவிரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்னிலைப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து காவிரி குடிநீர் திட்டத்தில் 5வது கட்ட பணியில் 110 கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க மாநகராட்சி திட்டமிட்டதுடன் ரூ.4,336 கோடி செலவில் திட்ட வரைவு தயாரித்தது. இத்திட்டம் செயல்படுத்த மாநில அரசு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, குடிநீர் இணைப்பு கொடுக்கும் திட்ட பணி தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் திட்ட பணி நடந்து வந்தது.

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ராம்பிரசாத் மனோகர் பொறுப்பேற்றதுடன், இத்திட்ட பணியை தீவிரப்படுத்தினார். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக திட்ட பணி முடிக்கப்பட்டது. அதை எலகங்கா, யஷ்வந்தபுரம், பெங்களூரு தெற்கு, பேட்டராயனபுரா, தாசரஹள்ளி, ராஜராஜேஸ்வரிநகர், பொம்மனஹள்ளி ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 110 கிராமங்களில் உள்ள 45 ஆயிரம் குடியிருப்புகளுக்கு காவிரி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இத்திட்டத்திற்கான துவக்க விழா நாளை மண்டியா மாவட்டம், மளவள்ளி தாலுகா, தொரேகாடனஹள்ளி கிராமத்தில் நடைபெறுகிறது. மாநில துணைமுதல்வரும், நீர்ப்பாசனம் மற்றும் பெங்களூரு மேம்பாட்டு துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தலைமையில் நடக்கும் விழாவில், முதல்வர் சித்தராமையா தொடங்கி வைக்கிறார். மாநில அமைச்சர்கள், 7 சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். திட்டம் துவங்குவதன் மூலம் 14 ஆண்டுகால கனவு நனவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

The post பெங்களூரு மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்கும் திட்டம்: முதல்வர் சித்தராமையா நாளை தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article