"பூவே உனக்காக" திரைப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு

3 months ago 15

சென்னை,

பூவே உனக்காக இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில், விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியான படம் இது.

விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று `பூவே உனக்காக'. இந்தப் படத்துக்கு முன் அவர் 'ரசிகன்', 'தேவா', 'ராஜாவின் பார்வையிலேயே' சந்திரலேகா' படங்களில் நடித்துள்ளார். அவரை பேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததில் இந்தப் படத்துக்கு முக்கிய பங்குண்டு. அதைப் போல இயக்குநர் விக்ரமன் கரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய 'புதிய மன்னர்கள்', 'நான் பேச நினைப்பதெல்லாம்' இரண்டுமே பெரிய வெற்றிபெற்றவில்லை. ஆனால், இந்தப் படம் 270 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. கடந்த 1996 பிப்ரவரி 15ம் தேதி மதுரையிலும் அதன் மறுநாள் (16ம் தேதி ) உலகமெங்கும் வெளியானது.


காதல் புனிதமானது என்பதைத் தாண்டிவிட்ட காதலின் மென்மையை இழை இழையாய்ப் பிரித்து கவிதை போல் சொல்லியிருப்பார் இயக்குநர் விக்ரமன். 'தோக்கறதுக்கு காதல் ஒண்ணும் பரிட்சை இல்லீங்க' என்பார் விஜய். சொல்லிவிட்டு தனியே செல்லும் விஜய்யுடன் டைட்டில் கார்டு போட்டு, சுபம் போடுவார் இயக்குநர் விக்ரமன்.

சிக்லெட்டு சிக்லெட்டு சிட்டுக்குருவி, ஆனந்தம் ஆனந்தம் பாடும், சொல்லாமலே யார் பார்த்தது, ஓபியாரி என எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசைவண்ணம், அற்புதம். குறிப்பாக, முரளி கவுரவத்தோற்றத்தில் நடிகராகவே வந்து, 'மச்சினிச்சி வர்ற நேரம் மண்மணக்குது மனசுக்குள்ளே பஞ்சவர்ணக்கிளி பறக்குது' என்ற பாடல் தனி ரகம்.

தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் தான் காதல் கைகூடவில்லை. ஆனால் அப்பெண் ஆசைப்பட்டதையாவது நிறைவேற்றி வைக்கலாமே என்பது தான் பூவே உனக்காக படத்தின் கதையாகும். ஒரு ஊரில் இந்து, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இரு நண்பர்கள் வீட்டில் உள்ள இருவர் காதலிக்கின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற நண்பர்களாக இருந்த குடும்பம் எதிரியாக மாறுகிறது. இதனிடையே 25 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு குடும்பங்களின் பேரன் என சொல்லிக் கொண்டு விஜய் வருவார். அவர் இரு குடும்பங்களையும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சங்கீதா வருவார். விஜய் அந்த இரண்டு வீட்டின் பேரன் இல்லை என சங்கீதா சொல்ல, உண்மையில் விஜய் யார்? அவர் ஏன் இருகுடும்பங்களையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறார்? என்பதை பிளாஸ்பேக் காட்சிகளோடு அழகாக சொல்லியது "பூவே உனக்காக".

"மதம் மனுசங்க கிட்டதான் இருக்கு.. ஆனால் காதல் காக்கா, குருவிகிட்ட கூட இருக்கு", "காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்" என படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி இன்றுடன் 29 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களானாலும் பூவின் நறுமணத்துடன், நம் மனதை நிமிண்டிக் கொண்டே இருக்கும், 'பூவே உனக்காக' படத்தின் வாசம்.

Read Entire Article