பூமிக்கு அருகில் வரும் புதிய மினி நிலா: 2 மாதம் தெரியும்

3 months ago 25

சென்னை: பூமிக்கு அருகில் வரும் இரண்டாவது நிலவு நேற்று தெரிந்தது. இது 2 மாதம் விண்ணில் தெரியும் என்றும் அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். விண்ணில் சுற்றிக் கொண்டு இருக்கும் விண்கல் ஒன்று பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் வரும் போது அதை பூமியின் சுற்றுப் பாதைக்குள் இழுப்பதால் நமக்கு இன்ெனாரு ஒளியுடன் கூடிய நிலவு போன்ற தோற்றத்தை நாம் பார்க்க முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிகழ்வு வானில் நேற்று நிகழ்ந்தது.

இதுகுறித்து அறிவியல் அறிஞர்கள் கூறியதாவது:
பூமி தனது ஈர்ப்பு விசையால் 2024 PT5 என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு என்னும் விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போல் அல்லாமல், இந்த “புதிய மினி-நிலா” இரண்டு மாதகாலம் நமக்கு ஒரு நிலவுபோலத் தெரியும். பின்னர் நமது பூமிக்குப் பின்னால் உள்ள சிறுகோள் பகுதியில் (பெல்ட்) இருக்கும் தனது இருப்பிடத்துக்கு திரும்பிவிடும். தன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கற்கோளத்தை பூமி தனது ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் கொண்டுவருவதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களின் கருத்துப்படி 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.

‘‘மினி-மூன் நிகழ்வுகள்” என்று அழைக்கப்படும் ஆய்வில் இந்தச் சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 7ம் தேதி நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த 2ம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும். 2024 PT5 விண்கல் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது நமது நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. (நிலவின் சுற்றளவு 10,921 கிமீ).

இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25ம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981 ல் சிறிய நிலவாக மாறியது. 2022 ல் மீண்டும் அது தோன்றியது. ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055ல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

The post பூமிக்கு அருகில் வரும் புதிய மினி நிலா: 2 மாதம் தெரியும் appeared first on Dinakaran.

Read Entire Article