பூமி காற்றை சுவாசித்தார் இந்திய வீரர் சுபான்சு சுக்லா : டிராகன் விண்கலத்தில் இருந்து புன்னகை பூத்தபடி வெளியே வந்தார்!!

5 hours ago 2

வாஷிங்டன் : பூமிக்கு திரும்பிய டிராகன் விண்கலத்தில் இருந்து 2வது வீரராக இந்திய வீரர் சுபான்சு சுக்லா வெளியே வந்தார்.

*ஆக்சியம்-4 வணிக திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா, முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோர் கடந்த மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.

*சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த சுபான்சு சுக்லா, தனக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆய்வுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்ததாக நாசா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சுபான்சு சுக்லா உட்பட 4 வீரர்களும் டிராகன் விண்கலம் மூலம் நேற்று பூமிக்கு புறப்பட்டனர்.

* 22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு பூமியை நோக்கி வந்த விண்கலத்தின் வேகம் பாராசூட்கள் மூலம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. பூமியிலிருந்து 5.7 கிமீ உயரத்தில் விண்கலம் வந்ததும் முதல் பாராசூட்விரிக்கப்பட்டது. பின்னர் 2 கிமீ உயரத்தில் பிரதான பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலத்தின் வேகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

*இந்த விண்கலம் அமெரிக்காவின் நேரப்படி அதிகாலை 2.31 மணிக்கு கலிபோர்னியோ கடலில் தரையிறங்கியது. விண்கலம் கடலில் விழும் நிகழ்வு ஸ்ப்ளாஷ் டவுன் எனப்படும். வெற்றிகரமாக ஸ்ப்ளாஷ் டவுன் முடிந்ததை அடுத்து, படகு மூலம் விண்கலம் கப்பலில் ஏற்றப்பட்டது.

*தொடர்ந்து விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, முதல் வீரராக பெக்கி விட்சன், வெளியே அழைத்து வரப்பட்டார்.

*2வதாக விண்கலத்தில் இருந்து இந்தியாவின் சுபான்சு சுக்லா புன்னகை பூத்தபடி வெளியே வந்தார். ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோரும் வெளியே வந்தனர்.

*இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுபான்சு. டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக சுபான்சு சுக்லா பூமிக்கு திரும்பியதை கண்டு அவரது பெற்றோர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

* 4 விண்வெளி வீரர்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

* இந்திய விமானப்படை வீரரான சுபான்சு, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராவார். அவரது இந்த வெற்றிகரமான விண்வெளிப்பயணம் ககன்யான் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பூமி காற்றை சுவாசித்தார் இந்திய வீரர் சுபான்சு சுக்லா : டிராகன் விண்கலத்தில் இருந்து புன்னகை பூத்தபடி வெளியே வந்தார்!! appeared first on Dinakaran.

Read Entire Article