சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி (திமுக) பேசுகையில், பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்: திருவள்ளூரில் ஏற்கனவே ஒரு மருத்துவ கல்லூரி இயங்கி கொண்டிருப்பதால், அங்கே புதிதாக மருத்துவ கல்லூரி தொடங்கப்பட வேண்டிய அவசியமில்லை.
* ஆ.கிருஷ்ணசாமி: பூந்தமல்லி என்பது சென்னையின் மேற்கு நுழைவாயில், அது ஒரு மிகப் பெரிய ஜங்ஷன். அந்த இடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டியாக ஓரு அரசு மருத்துவ கல்லூரியை கட்டினால் மிகச் சிறப்பாக இருக்கும். சிறிது காலம் கடந்தாவது, அதைக் கட்டித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2021ம் ஆண்டு பூந்தமல்லியில் பொது மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு இடம் தேர்வு செய்வதிலே சில சங்கடங்கள் ஏற்பட்டு, வழக்கு தாக்கல் செய்துவிட்டனர். இப்போது இடம் தயாராக இருக்கிறது. ஆனால், அந்த நிதியை பயன்படுத்தாமல், நிதி மீண்டும் அரசுக்கு போய்விட்டது. எனவே, இந்தி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
* அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே ரூ.7 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான அரசு நல வாழ்வு மையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான புதிய கட்டிடங்கள், துணை சுகாதார நிலையங்கள் என, இப்படி ஏராளமான கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன; இன்னமும் ரூ.7 கோடி செலவில் பல்வேறு கட்டிட பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
The post பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும்: சட்டசபையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வலியுறுத்தல் appeared first on Dinakaran.