தஞ்சாவூர், நவ. 14: பூதலூர் ஒன்றியத்தில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் ஆறு, ஏரி, மோட்டார் பாசனத்தில் கடந்த இரண்டு மாதமாக நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு, கை நடவு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பூதலூர் ஒன்றியத்தில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் வழியாக 60-க்கும் மேற்பட்ட ஏரிகள் நீர் நிரம்பி, அதன் மூலம் 7,279 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகளில் சாகுபடி நடைபெறாத நிலை ஏற்பட்டது.
நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வழக்கமான ஜூன் 12ம் தேதிக்கு பதிலாக, ஜூலை மாதம் 28ம் தேதி திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு ஜூலை 31ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அபரிமிதமாக இருந்ததால், கல்லணை திறக்கப்பட்ட அதே நாளில், புதிய கட்டளை மேட்டு கால்வாயிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய கட்டளை மேட்டு கால்வாய் தலைப்பிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், பூதலூர் ஒன்றிய பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் ஒன்று கூடி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
போராட்டங்களின் எதிரொலியாக புதிய கட்டளை மேட்டு கால்வாயில் பூதலூர் ஒன்றிய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீராலும், அந்த பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையாலும் தற்போது புதிய கட்டளை மேட்டு கால்வாய் பாசன பகுதிகளில் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் ஒருபோக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணிகளையும், நடவுப் பணிகளுக்காக வயல்களில் தண்ணீர் பாய்ச்சி உழவு பணிகளையும் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் வடகிழக்கு பருவங்களில் மழை சரியான அளவில் பெய்து, அனைத்து ஏரிகளும் நிரம்பும்பட்சத்தில் புதிய கட்டளை மேட்டு கால்வாயில் தண்ணீர் விடப்பட்டால் ஒரு போக நெல் சாகுபடியை எளிதில் செய்து விட இயலும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post பூதலூர் ஏரி பாசன பகுதிகளில் ஒரு போக சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்தம்: வடகிழக்கு பருவமழை பெய்யும் என நம்பிக்கையுடன் நடவு appeared first on Dinakaran.