பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 months ago 17

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது, அது 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழையால், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

60 கிராம மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Read Entire Article