பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும் அரசாணையை நிறுத்தி வைக்க கோரிக்கை

1 week ago 6

*பிஏபி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் உள்ள பிஏபி தலைமை அலுவலகத்தை நேற்று, பிஏபி விவசாயிகள் பலர் முற்றுகையிட்டு, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

“பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து,பூசாரிநாயக்கன் ஏரிக்கு இந்த ஆண்டு மட்டும் 2 வது முறையாக தண்ணீர் திறந்து விடுவதற்கு கண்காணிப்புப் பொறியாளரால் பரிந்துரை செய்யப்பட்டு 7ம் தேதி முதல்(நேற்று) மூன்று நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை பெறப்பட்டுள்ளது. இதனை அறிந்து திருமூர்த்தி அணை நீர்தேக்க திட்டக்குழு மற்றும் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

திருமூர்த்தி அணையில் இருந்து பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வழங்குதல் குறித்து அரசு ஆணை கடந்த 6.11.2008 அன்று வெளியிடப்பட்டது.இந்த அரசாணை திருமூர்த்தி அணை விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று,அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டக்குழுவின் சார்பில் வழக்கை தாக்கல் செய்தோம்.

தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம், விதி 23 ன்படி திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவின் சம்மதம் இல்லாமல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணைக்கு பரிந்துரை எதுவும் செய்யக்கூடாது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்திருந்தார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடிதங்கள்,உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சட்டம் மற்றும் விதிகள் ஆகியவற்றை புறந்தள்ளி விட்டு பூசாரிநாயக்கன் ஏரிக்கு இந்த ஆண்டு மட்டும் இரண்டாவது முறையாக சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் விட அரசு ஆணை பெறுவதற்கு அதிகாரிகளால் பரிந்துரை செய்துள்ளதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும் அரசு ஆணையை நிறுத்தி வைக்க கேட்டுக்கொள்கிறோம். பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் அரசு ஆணையை நிறுத்தி வைக்காமலோ, மேற்கண்ட அரசு ஆணையை ரத்து செய்வதற்கு தாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யாமல் எங்களை புறக்கணித்தாலோ திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழுவினர் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும் திருமூர்த்தி அணை பாசனப் பகுதிகளான பத்து சட்டமன்ற தொகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுவது தங்களுடைய பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும் அரசாணையை நிறுத்தி வைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article