திருப்பூர், ஏப்.18: திருப்பூர் பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டு உள்ளது. மார்க்கெட்டிற்கு பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த பூ மார்க்கெட்டிலிருந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த வாரம் யுகாதி பண்டிகை, சித்திரை கனி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் காரணமாக பூக்களின் தேவை அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக பூ மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. தொடர்ந்து பனிப்பொழிவு குறைந்து கோடைகாலம் தொடங்கி இருப்பதன் காரணமாக பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால், விலையும் குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
சித்திரை கனியின் போது மல்லிகை பூ கிலோ 800 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 தினங்களாக 400 ரூபாய் மற்றும் அதற்கு குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் போதிய அளவு வியாபாரம் இல்லாததால் பூ மார்க்கெட் வெளியே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில்,‘கடந்த வாரம் தமிழ் பண்டிகைகள் அதிகமாக இருந்ததால் பூ வரத்து அதிகரித்தது. இருப்பினும், எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. இதனால், ஏராளமான பூக்கள் வியாபாரமாகாமல் தேக்கமடைந்தன. இதில் மல்லிகை பூ உள்ளிட்டவை வாசனை திரவியம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகளுக்கு அனுப்பப்படும். சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் அது போன்ற ஆலைகளுக்கு அனுப்பப்பட முடியாததால் வியாபாரம் ஆகாத நிலையில் குப்பையில் கொட்டப்பட்டது. மல்லிகை பூக்கள் சில அழுகியதால் குப்பையில் கொட்டப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
The post பூக்களுக்கு போதிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் கவலை appeared first on Dinakaran.