
சென்னை,
இந்திய சினிமா தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பாக்ஸ் ஆபிசில் பாலிவுட் படங்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும்நிலையில், கேஜிஎப், பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தென்னிந்திய சினிமாவைவும் உலக அளவில் பிரபலமாக்கின. இப்படங்கள் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தன.
அதேபோல, வெளியாவதற்கு முன்பே சில படங்கள் பாக்ஸ் ஆபிசில் பெரும் புயலை உருவாக்கி இருந்தன. அந்த வகையில், ரீலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 100 கோடி வசூலித்த முதல் இந்திய படம் ஒரு தென்னிந்திய படம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், கடந்த 2021-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான 'மரக்கார்: லயன் ஆப் தி அரேபியன் சீ' படம் ரிலீசுக்கு முன்பே ரூ.100 கோடி வசூலித்து இதனை செய்த முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.
'மரக்கார்: லயன் ஆப் தி அரேபியன் சீ' படத்தை முதலில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி ரிலீசுக்கு பின்னரும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி உள்ள புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரூ. 106 கோடி வசூலித்து ரிலீசுக்கு முன்பு அதிக வசூல் செய்த படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.