
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 1-ம் தேதி பூச்சொரிதல் மற்றும் நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கம்பம் போடுதல், வாஸ்து மற்றும் கிராம சாந்தி, கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல் நிகழ்வும், மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற்றது.
விழா நாட்களில் மாரியம்மன் சூலத்தேவருடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பறவை காவடி, அலகு குத்துதல், கண்மலர் சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக உடுமலையின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. இதையடுத்து ஊஞ்சல் உற்சவம், லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. அம்மன் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு எழுந்தருளினார். பின்னர் குட்டை திடலில் பிரம்மாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் இறுதி நாளான நேற்று கொடி இறக்கமும் அதைத் தொடர்ந்து மகா அபிஷேகமும், மஞ்சள் நீராட்டும் நடைபெற்றது. மேலும் மேளதாளங்கள் முழங்க புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.