புழல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் இணைப்புகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

2 hours ago 2

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23வது வார்டு, 24வது வார்டுக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், கன்னடபாளையம், மகாவீர் கார்டன், திருநீலகண்டநகர், சாந்தினி அவன்யூ, சக்திவேல் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பல இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் முடிக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய்களில் ஒரு சிலர் குறிப்பாக சிவராஜ் முதல் தெரு, இரண்டாவது குறுக்குத் தெரு சந்திக்கும் இடத்தில் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்கு பைப் அமைத்து, அதனை மழைநீர் கால்வாயில் இணைத்துள்ளனர். இதனால் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மழை நீர் கால்வாயில் கலக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட 23வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர். இந்தநிலை நீடிப்பதால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் இணைப்பதற்கு முயற்சிகள் எடுப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாதவரம் மண்டலம் மாநகராட்சி சார்பில் புழல் பகுதியில் பல இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு பாதி இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக உள்ளன. கால்வாய் அருகில் மழைநீர் உள்ளே செல்வதற்கு இரும்பு கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை சில மர்ம நபர்கள் திருடிக்கொண்டு செல்கின்றனர். இதனால் சாலையோரங்களில் செல்லும்போது நிலை தடுமாறி அந்த பள்ளங்களில் விழுந்து எழுந்து படுகாயம் அடைகின்றனர். இந்நிலையில் மழை நீர் கால்வாய்களில் பெரும்பாலான இடங்களில் உள்ளவர்கள் கழிவுநீர் செல்வதற்கு பைப் வைத்து வருகின்றனர். இதுபோன்ற புகார்களையும் 23வது வார்டு, 24வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தாலும் கண்டும் காணாமல் உள்ளனர். இதேநிலை நீடித்தால் மழைநீர் கால்வாய் கழிவு நீர் கால்வாயாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுபவர்கள் மீதும், மழைநீர் கால்வாய் அருகில் உள்ள மழைநீரை உள்வாங்கிச் செல்லும் இரும்பு தடுப்பு கம்பிகளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

The post புழல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் இணைப்புகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article