புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் நடிகை கஸ்தூரி விடுவிப்பு: ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

3 days ago 2

சென்னை: புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த நடிகை கஸ்தூரிக்கு, ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரியின் அவதூறு பேச்சு குறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தன் பேரில், அவரை கைது செய்ய போலீசார் முயன்றனர். தலைமறைவான அவரை கடந்த 17ம் தேதி ஐதராபாத்தில் எழும்பூர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.‌ சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவருக்கு பிணையப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால், நேற்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று மாலை சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரியை, அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு நின்று வரவேற்றனர்.

அப்போது, அவரை வாழ்த்தி பிராமண சங்கத்தினர் முழக்கமிட்டனர். அப்போது கஸ்தூரி தமிழிலும், அடுத்தடுத்து ஆங்கிலம், தெலுங்கில் பேசி தம்மை ஆதரித்தவர்களுக்கும், தன்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார். தொடர்ந்து அவர் கூறியதாவது: வழக்கறிஞர்களுக்கும் அரசியல் வித்தியாசம் பார்க்காமல், ஆதரவு தந்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும், சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து குரல் கொடுத்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. என்மீது அன்பு செலுத்தி உறுதியாக ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. குன்றாக சிறைக்குள் சென்ற நான் தற்போது மலையாக வெளியே வந்துள்ளேன். இப்படி என்னை மாற்றியவர்களுக்கு நன்றி.

 

The post புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் நடிகை கஸ்தூரி விடுவிப்பு: ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article