புழல் சக்திவேல் நகரில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் அவதி

2 months ago 16

புழல்: புழல் சக்திவேல் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், திருநீலகண்ட நகர், சக்திவேல் நகர், மகாவீர் கார்டன், சாந்தினி அவன்யூ உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, புழல் சக்திவேல் நகர் பிரதான சாலையில் கடந்த 2 மாத காலமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

இதற்கிடையில், அப்பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் பைப்புகள் சரிசெய்ய பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, குடிநீர் பைப் உடைந்து அதிலிருந்து குடிநீர் வீணாகி, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர், சேதமடைந்த குடிநீர் பைப் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில், பிரதான சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே, சாலையின் குறுக்கே செல்லும் பழைய மழைநீர் கால்வாயை அகற்றும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியால், இச்சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி வருகிறது. இதனால், இச்சாலையில் செல்லும் ஏராளமான பொதுமக்களும், ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க வரும் பயனாளிகளும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாதவரம் மண்டல உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து பருவமழை காலம் தொடங்குவதற்கு முன், மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, சக்திவேல் நகர் பகுதி மக்கள் கூறுகையில்; சக்திவேல் நகர் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், இச்சாலை படுமோசமாகி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் லேசான மழை பெய்தால் கூட பொதுமக்கள் நடந்து செல்லும்போது, சறுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, பலமுறை புழல் 23வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இப்பகுதியில் மந்தகதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடித்து, சாலையினை சீரமைக்க வேண்டும். இல்லையெனில், சக்திவேல் நகர் மற்றும் மெர்சி நகர் பகுதி மக்கள் திரட்டி 23வது வார்டு மாநகராட்சி முன்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.

The post புழல் சக்திவேல் நகரில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article