புலிகள் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை? உச்ச நீதிமன்றம் கேள்வி

2 months ago 6

புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது மாஞ்சோலையில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என்று கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ராமன் மற்றும் வழக்கறிஞர் பூர்ணிமா கிருஷ்ணா,சுமார் 460 குடும்பங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். 80 குடும்பங்கள் மட்டும் தான் அங்கு தற்போது தங்கி உள்ளனர். மாஞ்சோலை விவகாரத்தை பொருத்தமட்டில் அடிப்படை பிரச்சனை என்னவென்றால் பாதுகாப்பு தான் ஆகும். அதுவே அரசுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் அது புலிகள் வாழும் வனப்பகுதி ஆகும்.

அதனை அடிப்படையாக கொண்டு 80 குடும்பங்களை கிளம்ப கூறினோம். மேலும் அரசு தரப்பில் இருந்து வலுக்கட்டாயமாக யாரையும் அப்புறப்படுத்த விரும்பவில்லை. அங்கிருந்து கிளம்பிய குடும்பங்களுக்கு அரசு மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும் மாஞ்சோலை தொழிலாளர்கள் குடும்பத்தை அரசு கைவிடவில்லை, மாறாக தேயிலை தோட்ட நிர்வாகம் தான் கைவிட்டது. குறிப்பாக மாஞ்சோலையில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் செய்து தரப்படுகிறது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் நீதிபதிகள் கூறியதில், இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறவில்லையே. போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புலிகள் இருக்கும் பகுதியில் எப்படி பாதுகாப்பாக அவர்கள் இருக்கின்றனர். குறிப்பாக இதில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் அனைவரையும் ஏன் தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்தவில்லை.

உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அரசுக்கு ஆதரவாக தானே உள்ளது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருக்கலாமே?. மேலும் இந்த விவகாரத்தில் எங்களது முக்கிய கேள்வியாக இருப்பது புலிகள் உள்ள மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தக் கூடாது என்பதாக தான் இருக்கிறது என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post புலிகள் இருக்கும் மாஞ்சோலை பகுதியில் இருந்து ஏன் அனைவரையும் அப்புறப்படுத்தவில்லை? உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article