புற்றீசல்களாக பெருகி வரும் தேர்வு முறைகேடுகள்: ராஜஸ்தான் காவல்துறையில் பிடிபட்ட நீட் மோசடி கும்பல்

4 hours ago 2

ராஜஸ்தான்: நீட் தேர்வில் முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் ராஜஸ்தானில் பிடிபட்டுள்ளது. மருத்துவ இடம் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் பணம் வாங்கிய 4 பேரை ஒடிசா போலீஸ் கைது செய்துள்ளது. மருத்துவ கல்விக்கு மாணவர்களிடம் காணப்படும் அதீத ஆர்வத்தை பயன்படுத்தி கொண்டு மோசடியை அரங்கேற்றும் கும்பல்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு நீட் தேர்வு வினா தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அரங்கேறிய நிலையில் இந்த ஆண்டு அவற்றை தடுக்க தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்திருந்தது. ஆனால் அதையும் மீறி ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கான வினாத்தாளை 40 லட்சம் ரூபாய்க்கு தருவதாக கூறி ஒரு மாணவரின் பெற்றோரிடம் மோசடி கும்பல் பேரம் பேசி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட பல்வான், முகேஷ் மீனா, ஹர்தாஸ் ஆகியோரை ராஜஸ்தான் காவல்துறை கைது செய்துள்ளது.

இதே போல நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தும் பல்வேறு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தர மாணவர்களிடம் தலா ரூ.20 லட்சம் வாங்கிய 4 பேரை ஒடிசா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பத்தினம் திட்டா மையத்தில் மற்றொரு மாணவரின் பெயரில் போலியான தேர்வுக்கூட அனுமதி சீட்டுடன் ஒரு மணிநேரம் தேர்வு எழுதிய பின் மாணவர் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார். அனுமதி சீட்டில் இருந்த பெயர் கொண்ட மாணவர் திருவனந்தபுரத்தில் தேர்வெழுதப்பட்டதும் கண்டறியப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்டவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது பயிற்சி மையமே போலி அனுமதி சீட்டை தந்ததாக கூறியுள்ளார். இந்த முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post புற்றீசல்களாக பெருகி வரும் தேர்வு முறைகேடுகள்: ராஜஸ்தான் காவல்துறையில் பிடிபட்ட நீட் மோசடி கும்பல் appeared first on Dinakaran.

Read Entire Article