
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த கொடுவாய், நிழலி கிராமம் எல்லப்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவரது அக்காள் மகன் 15 வயது சிறுவனுடன் நேற்று மதியம் 1 மணி அளவில் கொடுவாய் நிழலி கிராமத்திலிருந்து அவர்களது காரில் சொந்த வேலையாக காங்கயத்திற்கு வந்துள்ளனர்.
காரை கார்த்தி ஓட்டி வந்தார். அவர் அருகே சிறுவன் அமர்ந்திருந்தான். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கயம் அடுத்த அகஸ்தியலிங்கம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் இடப்புறம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து உருண்டது.
இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து கிழே விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி இருவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.