புரோட்டீன் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்!

3 weeks ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உடலில் தசைகள், சருமம், ஹார்மோன், என்சைம் ஆகியவற்றிற்கு புரோட்டீன் மிகவும் அவசியம். இது நம் உடலில் பல முக்கிய வேலைகளை செய்கிறது. நம் உடலில் 20 வகையான அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றில் 8 அமினோ அமிலங்கள் மிக முக்கியமானவை. காரணம் இவற்றை நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாது. இந்த எட்டு அமிலங்களையும் நாம் உணவால் மட்டுமே பெற முடியும். மற்ற 12 அமிலங்களையும் நமது உடலே உற்பத்தி செய்து கொண்டுவிடும். புரோட்டீனில் உள்ள சிறு சிறு அணுக்கள் அமினோ அமிலத்தால் ஆனவை. எனவே, அவரவர் உடலுக்கு ஏற்ப புரோட்டீனின் தேவையும் மாறுபடும்.

ஒருவருடைய உயரம், பருமன் இவற்றிற்கு ஏற்ப புரோட்டீன் தேவை அமையலாம். உங்கள் வயது, உடல் நிலை, வேலை ஆகியவற்றை பொருத்தும் புரோட்டீன் அளவு மாறுபடலாம். உங்கள் எடை சராசரியாகவும், உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்தால் 0.36லிருந்து 0.6 கிராம் ஒரு பவுண்டிற்கு என்ற விகிதத்தில் புரோட்டீன் தேவை அமையலாம். ஆண்களுக்கு 51லிருந்து 91 கிராம் புரோட்டீனும், பெண்களுக்கு 46லிருந்து 75கிராம் புரோட்டீனும் தினசரி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த தேவைக்கு குறைவாக இருக்கும்போது புரோட்டீன் பற்றாக்குறை நமது உடம்பில் நிகழ்கிறது. தேவையான அளவு புரோட்டீன் நம் உடம்பில் இல்லை என்றால் நமது உடம்பு பல்வேறு உபாதைகளுக்கு உட்படுகிறது. புரோட்டீன் பற்றாக்குறையால் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை பார்ப்போம். புரோட்டீன் பற்றாக்குறையால் நமது உடம்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. புரோட்டீன் பற்றாக்குறை உள்ளது என்பதை உணர்த்த நமது உடம்பு சில அறிகுறிகளை காட்டுகிறது.

எடை குறைவு

போதிய அளவு உணவு எடுத்துக் கொண்டாலும் அதில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பது. இதற்கு க்வாஷிவோர்கோர் என்பார்கள். புரோட்டீன் மற்றும் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் மரைஜ்மஸ் என்பார்கள். இவ்வாறு புரோட்டீன் பற்றாக்குறையை இரண்டு வகைகளாக சொல்கின்றனர்.

புரோட்டீன் குறைவான உணவை உட்கொண்டால் அது சரிவிகித உணவாகாது. உணவில் போதுமான கலோரிகள் இல்லை என்றே சொல்லலாம். நீங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் உடல் சக்தி பெறுவதற்கு புரோட்டீனை எடுத்துக் கொள்கிறது. இதனால் உங்கள் எடை குறைந்துவிடுகிறது. சிலரது உடலில் புரோட்டீன் ஜீரணிக்க தேவையான எரிசக்தி இல்லை என்றால் எடை கூடுவதும் உண்டு.

புரோட்டீன் பற்றாக்குறை ஏற்பட்டால் கேசம், சருமம் மற்றும் நகங்களை பாதிக்கும். புரோட்டீன் குறைந்தால் கேசம் அடர்த்தியை இழக்கிறது. நகங்கள் உடைந்து போகின்றன. சருமம் வறண்டு போகின்றது. உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கவில்லை என்றால் தசைகள் பலவீனமடைகின்றன. உடல் தசைகளிலிருந்து அமினோ அமிலங்களை அடைய முயற்சிப்பதால் தசைநார்கள் குறைந்துவிடுகின்றன.

மெட்டபாலிக் ரேட் குறைந்து விடுகிறது. உடலில் வலுவும், எனர்ஜியும் இல்லாமல் இருப்பது போன்ற நிலை ஏற்படும். புரோட்டீன் ஜீரணமாக கார்போஹைட்ரேட்டை விட அதிக நேரம் எடுக்கும். அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக குறைகிறது. இதனால் சர்க்கரை அல்லது இனிப்பு சாப்பிட ஆசை ஏற்படுகிறது. அதனால் உணவில் புரோட்டீனும், கார்போஹைட்ரேட்டும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடலில் புரோட்டீன் அளவு குறைந்தால் வைட்டமின் 12 மற்றும் ஃபோலைட் குறைபாடு ஏற்படலாம். இதனால் ரத்தம் குறைந்து அனீமியா ஏற்படுகிறது. சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் ரத்தகொதிப்பு குறைந்து களைப்பாக உணரும் நிலை ஏற்படும்.புரோட்டீன் குறைபாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. அடிக்கடி நோய் ஏற்படும். குணமாக அதிகநாள் தேவைப்படும். இம்யூன் செல்கள் புரோட்டீனால் ஆனவை. ஆகையால் சரிவிகித உணவு உட்கொள்ளவிட்டால் உடல் பாதிக்கக்கூடும்.

புரோட்டீன் குறைபாட்டால் ரத்தக் கொதிப்பு உண்டாகும். வாய்ப்புகள் அதிகம். உடலுக்கு சரியான சத்துணவு கிடைக்கவில்லை என்றால் எல்லா உறுப்புகளும் சரியாக செயல்பட முடியாமல் போகும். புரோட்டீன் குறைபாடும் கல்லீரல் நோயும் ஒன்றோடு ஒன்று சம்பந்தபட்டது.

புரோட்டீன் இல்லை என்றால் கல்லீரலின் வேலை நடக்காமல் நின்று விடும். புரோட்டீன் குறைபாடு ஏற்பாட்டால் உடல் தன் எரிசக்திக்காக தசைகளிலிருந்து கலோரியை எடுத்துக் கொள்ளும். இதனால் தசை நார்களில் வலி, மூட்டுவலி ஆகியவை ஏற்படும். நடுத்தர வயது ஆண்களின் வயது அதிகரிக்கும் போது சர்க்கோபேனியா உண்டாகிறது. அவர்கள் உடல் வலிமை குறைந்துவிடுகிறது. இவர்கள் உணவில் புரோட்டீன் அதிகம் சேர்க்கவில்லை என்றால் பிரச்னை அதிகமாகும்.

உங்கள் உடலில் புரோட்டீன் குறைந்தால் உடலில் வீக்கம் ஏற்படும். உடலில் தண்ணீர் சேர்த்து பருமனாக உணர்வீர்கள். புரோட்டீன் திசுக்களில் குறிப்பாக கால்களில், கணுக்காலில் தண்ணீர் சேராமல் தடுக்கிறது.புரோட்டீன் குறைவால் உடலில் எதிர்ப்பு சக்தி குறைகிறது. காயங்கள் ஆறவும். புதிய ஸ்கின் உருவாகவும் புரோட்டீன் மிகவும் அவசியம். புரோட்டீன் தசைகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

உடல் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். குழந்தைகள் தேவையான அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்ளாவிட்டால், அவர்கள் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதன் அறிகுறிகள் அறிந்து தேவையான அளவு புரோட்டீனும், கலோரியும் உள்ள உணவுகளை உட்கொண்டு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.

தொகுப்பு: தவநிதி

The post புரோட்டீன் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்! appeared first on Dinakaran.

Read Entire Article