சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதம் இருப்பது வழக்கம். இதனால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்து விடுவார்கள்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேட்டில் மீன்களை வாங்க நேற்று அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. மீன் வரத்தும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, சங்கரா, சுறா, வஞ்சிரம், வவ்வால், பாறை, மத்தி உள்ளிட்ட மீன்களை மீனவர்கள் அதிகளவில் பிடித்து வந்தனர்.