திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இங்கு மலையே மகேசனாக விளங்குவதால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதன்படி புரட்டாசி மாதத்தில் 2 பவுர்ணமி தினங்கள் அமைந்தன. அதன்படி இம்மாதத்தின் இரண்டாவது பவுர்ணமி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5.38 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று மாலையில் இருந்து பக்கர்கள் கிரிவலம் வந்தனர். இரவு 8 மணிக்கு பிறகு பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காக உயர்ந்தது. விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கனமழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனாலும், திருவண்ணாமலையில் நேற்று பகல் முழுவதும் மழை இல்லை. இதனால் நேற்றிரவு வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை இன்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பவுர்ணமியை முன்னிட்டு, வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் விழுப்புரம், காட்பாடி மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. கிரிவலம் முடித்துவிட்டு தங்களது ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
The post புரட்டாசி மாத பவுர்ணமி; தி.மலையில் 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம்: அண்ணாமலையார் கோயிலில் அலைமோதல் appeared first on Dinakaran.