புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

3 months ago 19

சென்னை,

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகபுகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவித்தனர். புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி காலையிலேயே வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும், மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டது.

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூரில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை வழிபாடு நடந்தது. இதில் பெருமாள் கோவில் வீரராகவப்பெருமாள், ராயபுரம் கிருஷ்ணன் கோவில் வேணுகோபால கிருஷ்ணர், குருவாயூரப்பன் கோவில் கிருஷ்ணர், திருப்பூர் திருப்பதி கோவில் வெங்கடேசபெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீற்றிருந்தனர்.

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உற்சவர்களான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர் தாந்தோணிமலையில் பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலில் குவிந்தனர்.

 

Read Entire Article