சென்னை: சென்னை, பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் புதிய வெள்ளி திருத்தேர் திருப்பணிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 19 கோயில்களில் ரூ.1,530 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவின் கீழ் திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதில் பவானி அம்மன் கோயிலில் ரூ.160 கோடி செலவிலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி செலவிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அறிவிக்கப்பட்ட 9 வெள்ளித்திருத்தேர்களில் காளிகாம்பாள் கோயில் மரத்தேர் பணி முடிவுற்று ரூ.2.17 கோடி செலவில் வெள்ளித்தகடு பதிக்கின்ற பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு கோயிலில் இருந்த 100 கிலோ வெள்ளி பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும், கோயிலை சேர்ந்த காளிதாஸ் சுவாமி 120 கிலோ அளவிற்கு பல்வேறு நன்கொடையாளர் வாயிலாக இந்த தேருக்கு வெள்ளியை உபயமாக பெற்று தந்துள்ளார். இந்த வெள்ளித்தேர் 2025 மார்ச் 1 அன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு நவ.28ம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, இணை ஆணையர் ரேணுகாதேவி, ஆர். வான்மதி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன், துணை ஆணையர் ஹரிஹரன், உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் நவ.28ல் குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.