புதுச்சேரி: புதுச்சேரியில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் மழை பொழிவில்லை. அதே நேரத்தில், மீனவர்கள் தடையை மீறி கடலுக்குச் சென்றால் நலத்திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது. இதையேற்று பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பி விட்டனர். 3-வது நாளாக இன்று யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கெனவே கடலுக்குச் சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் கரை திரும்பியுள்ளனர்.