பும்ரா, சிராஜ், இல்லை.. இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சாளர் அவர்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

1 month ago 5

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்த 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இதுவரை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். மற்ற பவுலர்களான சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோரின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு இல்லை.

அந்த சூழலில் 3-வது போட்டிகான இந்திய அணியில், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமியை சேர்க்க வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இன்னும் 100 சதவீதம் குணமடையாததால் அவர் 4-வது போட்டியில் தான் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவை விட முகமது ஷமி தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் பாராட்டியுள்ளார். ஆனால் அந்த இருவரையும் முகமது சிராஜால் நெருங்க கூட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு:- "ஷமி இந்தியாவின் சிறந்த பவுலராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா அளவுக்கு அவர் விக்கெட்டுகளை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் மற்ற பவுலர்களை விட அவர் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய முழுமையான பேக்கேஜ். ஷமி பந்தை ஸ்விங், சீம் செய்கிறார். பும்ரா போலவே அவரும் நல்ல கட்டுப்பாட்டை கொண்டுள்ளார். எனவே ஷமி கண்டிப்பாக விளையாட வேண்டும். முகமது சிராஜ் அவருக்கு அருகில் கூட இல்லை" என்று கூறினார்.

Read Entire Article