புனேவில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட்: ஆயத்தமாகும் இந்திய வீரர்கள்

3 months ago 13

புனே,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

 

கழுத்து பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத இந்திய வீரர் சுப்மன் கில்லும் பயிற்சி செய்தார். கில் அணிக்கு திரும்பும் போது சர்பராஸ்கான் அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் வெளியே உட்கார வேண்டி இருக்கும்.

இது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், 'நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இடம் பெறுவதற்கான போட்டியில் சர்பராஸ்கானும், லோகேஷ் ராகுலும் இருக்கிறார்கள். இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கடந்த டெஸ்டில் சர்பராஸ்கான் அற்புதமாக விளையாடி சதம் விளாசினார். அதற்கு முன்பாக இரானி கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருந்தார்.

லோகேஷ் ராகுல் பெரிய அளவில் ரன் எடுக்காவிட்டாலும் அவரது பேட்டிங் பார்ம் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். மனதளவிலும் வலுவாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் மிகவும் முக்கியம் என தலைமை பயிற்சியாளர் கம்பீர் நினைக்கிறார். அவர் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே இந்த டெஸ்டில் மொத்தம் 6 இடத்திற்கு 7 பேர் போட்டியில் உள்ளனர். ஆடுகளத்தை பார்த்த பிறகு எது அணிக்கு சிறந்ததோ அதன் அடிப்படையில் ஆடும் 11 பேரை தேர்வு செய்வோம்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இப்போது நன்றாக இருக்கிறார். பெங்களூரு டெஸ்டில் அவர் தன்னுடைய முழங்காலை அசைப்பதில் கொஞ்சம் அசவுகரியத்தை உணர்ந்தார். அதனால் கேப்டன் ரோகித் சர்மா முன்னெச்சரிக்கையாக கீப்பிங் செய்வதில் ஓய்வு கொடுத்தார். ஆனால் 2-வது டெஸ்டில் அவர் கீப்பிங் பணியை செய்வார் என்று நம்புகிறேன். சுப்மன் கில்லை பார்க்கும் போது 2-வது டெஸ்டுக்கான அணித் தேர்வுக்கு தயாராக இருப்பார் என்றே தெரிகிறது' என்றார்.

வானிலை நிலவரம்

இந்தியா - நியூசிலாந்து போட்டி நடைபெறும் ஐந்து நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களிலும் வானம் மிக லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் இந்தப் போட்டியில் இந்திய அணி வானிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து இருக்கும் நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article