புனே கார் விபத்து வழக்கு; சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் - சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் 2 பேர் டிஸ்மிஸ்

3 months ago 22

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான வேதாந்த், கடந்த மே மாதம் 19-ந்தேதி, நண்பர்களுடன் மது குடித்துவிட்டு அதிகாலை 3 மணியளவில் சொகுசு காரில் வீடு திரும்பியுள்ளார். சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் அதிவேகமாக சென்ற கார் முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த ஐ.டி. ஊழியர்களான அனுஷ் மற்றும் அவரது தோழி அஸ்வினி கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவரை மறுநாள் காலை சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை சமர்ப்பிக்குமாறு சிறுவனுக்கு சிறார் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிறார் நீதி வாரியத்தைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில், மாநில அரசால் நியமிக்கப்பட்ட 2 சிறார் நீதி வாரிய உறுப்பினர்களும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதாகவும், எனவே அவர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்து மராட்டிய மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article