அந்த ஊரில் ஆன்மிகப் பெரியவர் ஒருவர் இருந்தார். எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம்தான் கேட்பார்கள். அவரும் சாஸ்திரங்களை ஆராய்ந்து பதில் சொல்வார்.
ஒருமுறை அந்த ஊரில் உள்ள சில பக்தர்கள் ஒன்றாகக் கூடி ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.
“ஐயா, மனம் நன்றாக இருந்தால் கோயில் குளங்கள் எல்லாம் போக வேண்டியதில்லை என்கிறார்களே, வாஸ்தவம் தானா?’’
“அப்படியா, எதில் சொல்லி
இருக்கிறது?’’ உடனே ஒருவர்,
“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என்று சொல்கிறார்களே’’ என்றார்.
“ஓ நீங்கள் அந்த வரியைச் சொல்லுகிறீர்களா.. மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம். பெரும்பாலும் இந்த ஒரு வரியைச் சொல்லிவிட்டு எல்லோரும் நிறுத்தி விடுவார்கள்’’.
“அப்படியா நீங்கள் முழுப் பாடலையும் சொல்லுங்கள்’’
“இது ஒரு சித்தர் பாடல். இந்த பாடல் முழுமையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்’’.
“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே’’
இது அகஸ்தியர் பெருமானின் ஞான உபதேசப் பாடலாகும். இதன் முதல்
வரிக்கு பெரும்பாலோர் என்ன பொருள் சொல்கிறோம் என்று சொன்னால், மனது நன்றாக இருந்தால் போதும், கள்ளம் கபடம் இல்லாமல் இருந்தால் போதும், அப்படிப்பட்ட மனதிலே இறைவன் இருப்பான். பிறகு நீ ஏன் கோயிலுக்குப் போக வேண்டும், மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும்? என்கிறார்கள்.
“உண்மைதானே?’’.
“இதை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சுவையாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் மனம் செம்மையானால் அல்லவா மந்திரம் ஜெபிக்க வேண்டாம். ஆனால் மனம் செம்மை அடையவே மந்திரம் ஜெபிக்க வேண்டுமே.’’
“நீங்கள் சொல்வது சரிதான்’’
“உயிர் இருக்கின்ற வரை மனம் அடங்காது “உள்ளமோ ஒன்றில் நில்லாது’’ என்று திருமங்கையாழ்வாரும் பாடி இருக்கின்றார். மிகப் பெரிய முருக பக்தரான அருணகிரிநாதர், சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சடகசட மூட மட்டி பவவினையிலே சனித்த தமியன்’’ என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கின்றார். எனவே உயிர் இருக்கின்ற வரை மனம் அடங்காது. ஆனால் அந்த உயிரிலே மனம் அடங்கும்.’’ சற்று நிறுத்தி பெரியவர் தொடர்ந்தார்.
“சரி விஷயத்துக்கு வருவோம். மனம் அடங்க மந்திரம் ஜபிக்க வேண்டும். மந்திரம் கைவரப் பெற்று விட்டால் அதற்குப் பிறகு அதை ஜபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. கைவரப் பெறுவதற்கு நமக்கு மந்திரம் மட்டுமல்ல புனித யாத்திரைகள், தெய்வ தரிசனங்கள், மகான்கள் தரிசனங்கள், எனப் பல விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது புண்ணிய தலங்களை தரிசித்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல். கருட புராணத்திலே புண்ணிய நதிகளில் நீராடுதல் பற்றி பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.’’
“நல்ல மன சக்தி கிடைக்க ஆன்மிக வழிபாடுதான் சிறந்த வழி. ஆண்டவனைத் தொழுவதால் மனதை ஒருநிலைப்படுத்தலாம். ஆண்டவனை வழிபடுவதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று மனதைக் கோயிலாக்கி வழிபடுவது. மற்றொன்று ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழுவது. நம் மக்கள் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபடுவதையே காலங்காலமாக பின்பற்றி வருகிறார்கள். அதற்காகவே இந்தியாவை கோயில்களின் பூமி எனச் சொல்லலாம். எனவே முடிந்த அளவுக்கு தீர்த்த யாத்திரை செய்வதும் கோயில்களை தரிசிப்பதும் மனித வாழ்க்கையின் சிறந்த பேறாக அமையும்’’ இப்படிச் சொல்லிவிட்டு நிறுத்தினார். உடனே வந்திருந்த அனைவரும்,
“நாங்கள் மிக விரைவாக ஒரு குழுவாக சில திருத்தலங்களுக்குச் சென்று தீர்த்த யாத்திரை செய்யலாம் என்று இருக்கிறோம்’’ என்றனர்.
“மகிழ்ச்சி. ஆனால் அப்படிச் செய்யும் போது ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்’’
“என்ன விஷயம்?’’ என ஆவலோடு கேட்டனர்.
“அதை ஒரு கதையாகச் சொல்லுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்’’ என்று சொல்ல ஆரம்பித்தார்.
புகழ்பெற்ற ஞானி ஒருவரை ஒருமுறை சிலர் சந்தித்தார்கள்.
“நாங்கள் எல்லோரும், புண்ணிய யாத்திரை சென்று எல்லா புனித நதிகளிலும் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்! என்று அவரை
அழைத்தார்கள். ஞானியோ,
“இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், எனக்காக ஓர் உதவி செய்யமுடியுமா?’’ என்று அவர்களிடம் கேட்டார்.
“என்ன செய்ய வேண்டும்?’’ என்றார்கள் பணிவோடு. பாகற்காய் ஒன்றை அவர்களிடம் தந்த ஞானி,
“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்தப் பாகற்காயையும் அதில் முக்கி நீராடச் செய்து, திரும்பக் கொண்டு வந்து கொடுங்கள்!’’ என்றார். அவர்கள் வணங்கி விடைபெற்றார்கள். ஞானி கூறியதுபோலவே பாகற்காயை எல்லா புனித நதிகளிலும் முக்கி எடுத்தார்கள். திரும்ப எடுத்து வந்து அவரிடம் தந்தனர். பாகற்காயை வாங்கிய ஞானி, அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கினார்.
“புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்பொழுது சாப்பிட்டுப் பாருங்கள், தித்திக்கும்!’’ ஆளுக்கு ஒரு துண்டைத் தந்தார். ஆர்வமுடன் வாங்கியவர்கள் அதனை வாயில் போட்டு மென்ற வேகத்தில் அவர்கள் முகம் மாறியது.
“தித்திக்கும் என்றீர்கள்… ஆனால் கசக்கின்றதே…!’’ என்றனர். அமைதியாகப் புன்னகைத்த ஞானி சொன்னார்;
“பார்த்தீர்களா! பாகற்காய் எத்தனைதான் நதியில் முழுகினாலும் அதன் குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே, நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல் எத்தனை புனிதஸ்தலங்களுக்குச் சென்றாலும், புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும் என்ன பயன் வந்து
விடப்போகிறது? மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் பின் செயலிலும் வருவதே இனிதாகும்!’’
“உடல் அழுக்கு மட்டும் நீங்கினால் போதாது. மனதில் உள்ள அழுக்கும் நீங்க வேண்டும். மனம் வெளுப்பதுதான் உண்மையான புனிதநீராடல். எனவே நீங்கள் அவசியம் தீர்த்த யாத்திரை செய்யுங்கள். ஒவ்வொரு முறை நீரில் மூழ்கும் போதும் நம்முடைய மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள், பொறாமை எண்ணங்கள், அவநம்பிக்கைகள் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். மனதின் குற்றங்கள் மறைந்து மாசு நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். அந்த நதிகளின் புனிதத் தன்மையினால் உங்கள் மன அழுக்குகளும் அகன்று தூய்மை பெற்றுவிடுவீர்கள். தூய்மையான மனதில் இறைவன் குடி கொள்வான். அதற்குப் பிறகு உங்களுக்கு துன்பங்களே இருக்காது’’.
தேஜஸ்வி
The post புனித நதிகளிலே நீராடுவதற்கு முன் ஒரு நிமிடம் appeared first on Dinakaran.