சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். தற்போது நடைபெற்று வரும் புனரமைப்பு மேம்பாட்டு பணிகளான, கலையரங்கம், குறள்மணி மாட கூரை புனரமைப்பு, தரைகள் புதுப்பித்தல், குறள் மணிமாட ஓவியம் சீரமைத்தல், வளாக சுற்றுச் சுவர் புதுப்பித்தல், தூண்கள், நுழைவாயில் பகுதிகளில் சிற்ப வேலைபாடுகள், மாற்றுத் திறனாளிகள் நடைபாதை, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தேயக மின் தூக்கி, பலநிலை வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், விற்பனை மையம், மழைநீர் வடிகால் வசதி, 2 லட்சம் கொள்ளளவு நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல், பேவர் பிளாக் பாதை அமைத்தல், ஆர்ஓ பிளான்ட் அமைத்தல், புல்வெளி அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், ஒளி ஒலி காட்சி அமைத்தல் ஆகியவற்றின் பணி முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: புனரமைக்கப்படும் இந்த வள்ளுவர் கோட்டத்தில், கலையரங்கம், விவிஐபி போர்டிகோ, நீரூற்று, குறள் மணிமண்டபம் ஆகிய பணிகளை வரும் 20ம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். வள்ளுவர் கோட்டப் புனரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த களஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயலாளர் ஜெயகாந்தன், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளர் மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளர் கார்த்திகேயன், செயற்பொறியாளர் ஜெய்கர், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் விரைவில் திறப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.