புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தாம்பரம் மாநகர பகுதியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

3 weeks ago 5

தாம்பரம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கடற்கரை மற்றும் வழிப்பாட்டுதலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை காவல் மாவட்டங்களில் முக்கிய இடங்களான தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஓஎம்ஆர், இசிஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகன நெரிசல்களை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களையும் தடுத்து கண்காணிக்க 37 கூடுதலான காவல் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு பொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 முதல் 1.1.2025 வரை பொதுமக்கள் கடல்நீரில் இறங்கவோ, குளிக்கவோ முடியாதவாரு தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பனையூர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைத்தும் முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மேலும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு போலீசாருடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தவும், வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் நெருக்கமாக கூடுமிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெடிகள் வெடிக்க தடைசெய்யப்பட்டுள்ளது. ஒலி பெருக்கிகள் வைக்க உரிய அனுமதி காவல் துறையிடமோ அல்லது உரிய துறையிடமோ பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் அவசர மருத்துவ உதவிக்கு மருத்துவ வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எப்எல்2 மற்றும் எப்எல்3 மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மூடப்படும், மீறுவோர் மீது கட்டாயமாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒதுக்குப்புறமான அல்லது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

The post புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தாம்பரம் மாநகர பகுதியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article