புத்தகங்களின் காதலி பேராசிரியர்!!

2 months ago 13

முனைவர் மரிய தெரசா!!!

புத்தகங்கள்தான் எனது உலகம், என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை எழுதி வெளியிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே எனது வாழ்வின் ஆகப்பெரும் இலட்சியம் மற்றும் பெரும் ஆசை என்கிறார் சென்னையைச் சேர்ந்த முனைவர் பேராசிரியர் மரிய தெரசா. இதுவரை 300க்கும் அதிகமான புத்தகங்களை எழுதி வெளியிட்டு சாதனை படைத்துவருகிறார். பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மும்மொழி வல்லுநர் என்கிற பன்முக திறமை கொண்ட முனைவர் மரிய தெரசா தனது எழுத்தார்வம் மற்றும் புத்தகம் வெளியிடுவதில் உள்ள ஆர்வம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்..

எழுத்தார்வம் எங்கே எப்படித் துவங்கியது?

எனக்குச் சிறுவயதிலிருந்தே எழுதுவதிலும் புத்தகங்களை வாசிப்பதிலும் அதீத ஈடுபாடு உண்டு. அதே போன்று மொழி மீதும் அதீத பற்று இருக்கிறது. அதனால் தான் தமிழில் முனைவர் பட்டமும், ஹிந்தியில் முதுகலைப் பட்டமும், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும் படித்தேன். அதன் பிறகு ஆவடியில் உள்ள டிபன்ஸ் பள்ளியில் தமிழ் மற்றும் இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். அதே போன்று ஓய்வு பெற்ற பிறகு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தேன். எழுத்துத்துறையை பொறுத்தவரை எனது நாற்பதாவது வயதிற்குப் பிறகே புத்தகங்களை எழுதி வெளியிடத் துவங்கினேன். என் முதல் நூல் “நிழல் தேடும் மரங்கள்” 1998 ஆம் ஆண்டில் வெளியானது. அதனை ஆயிரம் பிரதிகள் வெளியிட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் புத்தகங்களுக்கான மதிப்பும் மரியாதையும் நன்றாக இருந்தது எனலாம்.

ஒரே நேரத்தில் நூறு புத்தகங்களை வெளியிட்ட அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள் …

புத்தகங்களை எழுதுவதும் வெளியிடுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .இதுவரை 50 விதமான வடிவங்களில் புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருகிறேன். அதில் கவிதை, மரபு, ஹைக்கூ, புதுக்கவிதை, புதினம், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம், கட்டுரை என பலதும் அடங்கும். 2018 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் நாற்பது புத்தகங்களை எழுதி ஒரே மேடையில் வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பும், பாராட்டுதல்களும் கிடைத்தது அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறைய நேரங்கள் கிடைத்தது. அதை எழுதுவதில் செலவிட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வைத்திருந்தேன். அதனை பிழைத்திருத்தம் செய்து 2022 ஆம் ஆண்டில் ஒரே மேடையில் 100 புத்தகங்களை வெளியிட்டேன். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டில் 50 புத்தகங்களை ஒரே நேரத்தில் வெளியிட்டிருந்தேன். சமீபத்தில் எனது 300 வது புத்தகத்தினை வெளியிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இன்னும் நிறைய புத்தகங்களை எழுதி வெளியிட வேண்டும் என்கிற பேராசைகள் எனக்கு இருக்கிறது. இது போன்று புத்தகங்களை வெளியிட இலட்சக்கணக்கான பணத்தினைச் செலவு செய்துள்ளேன். எனக்கு புத்தகங்களை வெளியிடுவதில் மட்டுமே அதீத ஆர்வம் உள்ளது.

உங்களது மொழிபெயர்ப்புப் பணிகள் குறித்து சொல்லுங்களேன்…

நான் இந்திமொழியில் இரட்டைப் பட்டதாரி என்பது எனக்குக் கூடுதல் சிறப்பு தான். அதன் மூலமாக தான் நிறைய புத்தகங்களை இந்தி மொழியில் மொழிபெயர்க்கும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்தி மொழியில் சுடர்முருகைய்யா அவர்களின் 1000 ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தினை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இரா. ரவி அவர்களின் 1000 ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தினை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். அதேபோல் செண்பக ராஜன் அவர்களின் ஹைக்கூ புத்தகத்தினை இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்தேன். எனது சொந்த ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தினையும் இந்தியில் மொழிமாற்றம் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. தற்போது மேலும் சில நல்ல புதினங்கள் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது.

உங்களுக்கான விருதுகள் மற்றும் பாராட்டுகள் பற்றி சொல்லுங்கள்…

எனது புத்தகச் சேவைகளுக்காக பல்வேறு பராட்டுதல்களையும், நிறைய விருதுகளையும் பெற்றது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. தமிழ் செம்மல் விருதினை 2019 ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கியது மிகவும் பெருமையான விஷயமாக இருந்தது. பல்வேறு இலக்கியத் தளங்களிலிருந்து 150 க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றதும் மகிழ்ச்சியான விஷயம். தற்போது பல நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வேண்டுகோளின் படி பத்ம  விருதிற்கு விண்ணப்பித்து இருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதுவரை 18 பேர் எனது நூலை ஆய்வு செய்து பட்டங்களை வாங்கியுள்ளனர் என்பதும் எனக்கு கௌரவமான மற்றும் பெருமிதமான விஷயமாக கருதுகிறேன். எனது கவிதை நூல்களில் சில கவிதைகளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொள்ளாச்சி என். ஜி. எம் கல்லூரி இளங்கலைப் பாடத் திட்டத்திலும் எனது ஹைக்கூ இடம்பெற்றுள்ளது.

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன? புத்தக வாசிப்புக்கான எதிர்காலம்எப்படி இருக்கிறது?

தற்போது ஓய்வு நேரங்களில் முப்பது நூல்களுக்கு மேல் எழுதி வைத்துள்ளேன். அவற்றோடு மேலும் சிலவற்றைச் சேர்த்து புத்தகமாக வெளியிட வேண்டும். மேலும் சில நல்ல நூல்களை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். நான் புத்தகம் வெளியிட ஆரம்பித்த காலத்தில் நிறைய புத்தகம் வாசிக்கும் ஆர்வம் வாசகர்களிடையே அதிகமாக இருந்தது. ஆனால் தற்போதைய நவீனயுகத்தில் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வமோ நேரமோ பலருக்கும் இல்லை என்பது வருத்தமான உண்மை. அதனால் புத்தகங்களை வாங்கும் மக்களும் குறைந்து கொண்டே வருகின்றனர். எது எப்படியாகினும் புத்தகம் போடும் ஆர்வம் எனக்குக் குறையப்போவது இல்லை. என்னால் முடிந்த அளவிற்கு இறுதிவரை புத்தகங்களை எழுதி வெளியிடுவதைத் தான் என் வாழ்வின் இலட்சியங்களாக கருதுகிறேன். தற்போது வரை கைகளாலேயே புத்தகங்களை எழுதி வருகிறேன். கணினியில் தட்டச்சு செய்யும் வழக்கமோ பழக்கமோ எனக்கு இல்லை. எனக்கு ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த பணத்தினைக் கூட புத்தகங்களை வெளியிடுவதில் தான் செலவழித்து வருகிறேன். அவ்வப்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து தருகிறேன். இதனையே என் வாழ்வின் பெரும் குறிக்கோள்களாக வைத்துள்ளேன் என்கிறார் முனைவர் மரிய தெரசா. இவர் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கும் சென்று அங்கு நடைபெறும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார். பல்வேறு இலக்கிய விழாக்களிலும் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு மேடையில் உரையாடி விழாக்களைச் சிறப்பித்தும் வருகிறார் இந்த எழுத்து வித்தகர் முனைவர் மரியதெரசா.
– தனுஜா ஜெயராமன்.

The post புத்தகங்களின் காதலி பேராசிரியர்!! appeared first on Dinakaran.

Read Entire Article