புதுவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

3 months ago 8

 

தவளக்குப்பம், பிப். 17: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 18 கிராம மீனவர்கள் 2ம் நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி தவளக்குப்பம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 14ம் தேதி தனியார் பள்ளியை முற்றுகையிட, ஆசிரியர் மணிகண்டனை விரட்டி விரட்டி தாக்கினர். பின்னர் பள்ளியில் புகுந்து சூறையாடியதை தொடர்ந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி- கடலூர் சாலையில் 7 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கலெக்டர் குலோத்துங்கன் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் ஆசிரியர் மணிகண்டன் (25) மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குபதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனிடையே சிறுமி பாலியல் சம்பவத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர் நல்லவாடு பகுதியில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி தெற்கு எஸ்.பி. பக்தவச்சலத்திடம் வழங்கினர்.

அந்த கூட்டதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பள்ளி தாளாளர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், சிறுமியின் பெற்றோரை அடித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக மீன்வர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்களின் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தனியார் பள்ளி மற்றும் தவளக்குப்பம் நான்குமுனை சந்திப்பு ஆகிய இடங்களில் 3வது நாளாக நேற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் போலீசாரிடம் வழங்கிய தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவர் சங்கம் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் இன்று மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுவை மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் 2வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article