
புதுச்சேரி,
புதுவை கடற்கரை அருகே சுப்பையா சாலையில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர், தீயணைப்பு நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் தாங்களாக முன்வந்து சோதனை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அதன்பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தபேட்டை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது49) என்பதும், அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவா், மற்றவா்களை பதற்றமடைய செய்வதற்காக இதுபோன்று போனில் மிரட்டல் விடுத்து வருவது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே புதுவை காலாப்பட்டு போலீஸ் நிலையத்திலும், விழுப்புரம் காணை போலீஸ் நிலையத்திலும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.