காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில், புதுமைப்பெண் விரிவாக்கம் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் விரிவாக்க திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு, கல்லூரி மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை (DEBIT CARD) வழங்கினார்.
இதில் அமைச்சர் பேசுகையில், 2022 முதல் தற்போது வரை புதுமை பெண் திட்டத்தின் கீழ், 7,777 மாணவிகளுக்கு தலா ரூ.1000 வீதம் மாதம்தோறும் என மொத்தம் தற்போது வரை ரூ.20.99 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2024 முதல் தற்போது வரை தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 8,599 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் மாதம்தோறும் ரூ.4.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், அவர்கள் உயர்கல்வி பயிலும் வரையில் மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புதுமைப்பெண் விரிவாக்கம் திட்ட நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 310 கல்லூரி மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக நடைபெறும் திட்டம் என்பதால் கல்லூரில் பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் சென்றடையும் நோக்கில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இன்று வருகை புரிந்துள்ள மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் பற்று அட்டை Pre Activate செய்யப்பட்டுள்ளது. பணம் வங்கி கணக்கில் வரப்பெற்ற விவரம் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், சப்-கலெக்டர் ஆஷிக் அலி, மாவட்ட சமூக நல அலுவலர் மோ.சியாமளா, திமுக நிர்வாகிகள் சந்துரு, திலகர், வெங்கடேசன், முத்துச்செல்வம், குமரேசன், நாத்திகம் நாகராஜ், மலர்மன்னன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post புதுமைப்பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டை: அமைச்சர் காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.