வாஷிங்டன்: மூன்றாம் பாலினம் தொடர்பாக டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுக்கும் நிலையில், பாலின அறுவை சிகிச்சைக்கு நிதிஉதவி அளிப்பதாக நாட்டுப்புற பாடகி லூசி டாகஸ் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், ‘அமெரிக்காவில் இனிமேல் ஆண், பெண் என்ற இரண்டு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை விதிக்கப்படும். ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்கள் பணிபுரிய தடை விதிக்கப்படும்’ போன்ற உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். டிரம்பின் இதுபோன்ற நிர்வாக உத்தரவுகளால் மூன்றாம் பாலினத்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். உலகளவில் மூன்றாம் பாலினத்தவர்கள் டிரம்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கிராமிய விருது பெற்ற அமெரிக்க நாட்டுப்புற பாடகி லூசி டாகஸ் வெளியிட்ட பதிவில், ‘பாலினம் மற்றும் திருநங்கைகள் தொடர்பான நிர்வாக உத்தரவுகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும். திருநங்கை தொடர்பாக தனது நிலை குறித்து கருத்து தெரிவிப்போருக்கு 500 டாலரும், அறுவை சிகிச்சை செய்ய விரும்பும் ஒவ்வொரு நபருக்கும் 10 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாயில் 8.65 லட்சம்) வரை உதவி செய்வேன். மற்றவர்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், தயவுசெய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post டிரம்பின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வலுக்கிறது: பாலின அறுவை சிகிச்சைக்கு ரூ.8.7 லட்சம் நிதிஉதவி.! நாட்டுப்புற பாடகி திடீர் அறிவிப்பு appeared first on Dinakaran.